எல்லோரும் தொலைதூர பயணத்துக்கு ரெயில்களைத்தான் விரும்புகின்றனர். மாற்றுத்திறனாளிகளும் இதற்கு விதிவிலக்கல்ல. ஆனால் மாற்றுத்திறனாளிகளுக்கு நடு படுக்கை (மிடில் பெர்த்) அல்லது மேல் படுக்கை (அப்பர் பெர்த்) ஒதுக்கப்படுகிற போது அவர்கள் அவற்றைப் பயன்படுத்த சிரமப்படுகின்றனர். இனி அந்த பிரச்சினை இல்லை. இனி மாற்றுத்திறனாளிகளின் ரெயில் பயணம் சுகமாகும், எளிதாகும்.
மெயில் மற்றும் விரைவு ரெயில்களில் மாற்றத்திறனாளிகளுக்கு கீழ்படுக்கைகளை (லோயர் பெர்த்) ஒதுக்க முன்னுரிமை வழங்க ரெயில்வே நடவடிக்கை எடுத்துள்ளது. அவர்களுடன் செல்கிற உதவியாளர்களுக்கு நடு படுக்கைகள் (மிடில் பெர்த்) ஒதுக்கப்படும்.
இதுதொடர்பாக ரெயில்வே மண்டல அலுவலகங்களுக்கு ரெயில்வே வாரியம் உத்தரவு ஒன்றை அனுப்பி உள்ளது. அந்த உத்தரவில், “மாற்றுத்திறனாளிகளுக்கும், அவர்களது உதவியாளர்களுக்கும் சிலிப்பர் கிளாஸ்சில் (எஸ்-பெட்டி) 2 கீழ் படுக்கை மற்றும் 2 நடு படுக்கை ஒதுக்கப்பட வேண்டும்.
மூன்றடுக்கு ஏ.சி. பெட்டிகளில் ஒரு கீழ் படுக்கை, ஒரு நடுபடுக்கையும், மூன்றடுக்கு எகனாமி ஏ.சி. பெட்டிகளில் ஒரு கீழ் படுக்கையும், ஒரு நடு படுக்கையும் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்” என கூறப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு ரெயில் பயணங்களில் கட்டண சலுகையும் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.