Tamilசெய்திகள்

ரெயிலில் பார்சல் அனுப்ப முன் பதிவு வசதி!

ரெயில்களில் நெடுந்தூர பயணம் செய்ய விரும்பும் பயணிகள் 120 நாட்களுக்கு முன்னர் முன் பதிவு செய்யும் வசதி உள்ளது. பார்சல்கள் அனுப்பும் வியாபாரிகள் ரெயில் நிலையங்களுக்கு நேரில் வந்து பதிவு செய்யும் வசதி மட்டுமே இருந்து வந்தது. இதனால் வணிகர்களின் வேலை நேரம் வீணாவதால் இந்த முறையை மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, தென்னக ரெயில்வேக்கு உள்பட்ட சென்னை, திருச்சி, மதுரை, சேலம், திருவனந்தபுரம் மற்றும் பாலக்காடு கோட்டங்களில் பார்சல் முன் பதிவு வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மதுரை கோட்டத்திலும் தூத்துக்குடி, நெல்லை மற்றும் மதுரை ரெயில் நிலையங்களில் இருந்து ஏராளமான பார்சல்கள் வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களுக்கு வணிகத்திற்காக அனுப்பி வைக்கப்படுகிறது. அதன்படி வணிகர்கள் தாங்கள் அனுப்பும் பார்சல்களின் எடைக்கு ஏற்ப பேக்கிங் செய்யும் அளவை 120 நாட்களுக்கு முன்னதாக முன்பதிவு செய்யலாம்.

பார்சல் வேன்களில் முன்பதிவு செய்யும் அளவு இடம் ஒதுக்கப்படும். இந்த முன் பதிவானது 8 டன் மற்றும் 24 சரக்கு ரெயில் பெட்டிகள் ஆகியவற்றிலும், பயணிகள் ரெயிலில் இணைப்படும் பார்சல் பெட்டிக்கும் செய்யப்படுகிறது. ஏற்கனவே ஒப்பந்தம் மற்றும் குத்தகை அடிப்படையில் இயக்கப்படும் பார்சல் பெட்டிகளுக்கு இந்த முன் பதிவு முறை பொருந்தாது.

இவ்வாறு பார்சல் முன்பதிவு செய்யும் போது 10 சதவீத கட்டணத்தை செலுத்த வேண்டும். மீதமுள்ள கட்டணத்தை ரெயில் புறப்படுவதற்கு 72 மணி நேரத்துக்கு முன்னதாக செலுத்த வேண்டும். அதேபோல, 72 மணி நேரத்துக்கு முன்னதாக முன்பதிவை ரத்து செய்தால் முன்வைப்புக்கட்டணத்தில் 50 சதவீதம் பிடித்தம் செய்யப்படும்.

இந்த கால அளவுக்கு பின்னர் முன்பதிவை ரத்து செய்தால் முழு கட்டணமும் திரும்ப கிடைக்காது. இந்த திட்டத்தில், ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட குத்தகைதாரர்களுக்கு 5 ஆண்டுக்கு மட்டும் பார்சல் பெட்டிகள் குத்தகைக்கு விடப்படுகிறது. அவர்கள் 8 டன் பார்சல் ரெயில் பெட்டிகளை ஒரு மாதத்துக்கு மட்டும் குத்தகைக்கு எடுத்து கொள்ளலாம்.

ஒரு மாதத்துக்கு மட்டும் தற்காலிக குத்தகைக்கு விடப்பட்டு வந்த 8 டன்னுக்கு அதிகமான பார்சல் பெட்டிகளை தற்போது கட்டண குறிப்பாணை கொடுத்து 10 நாட்களுக்கு மட்டும் கூட இந்த பெட்டிகளை குத்தகைக்கு எடுத்து கொள்ளலாம். நீண்ட காலமாக பயன்பாட்டில் இல்லாத பார்சல் பெட்டிகளுக்கான கட்டண குறிப்பாணையை ரெயில்வே நிர்வாகம் தெரிவிக்கும்.