தெலுங்கானா சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 30-ம் தேதி நடக்கிறது. இதையொட்டி, அங்கு ஆளுங்கட்சியாக உள்ள பாரத ராஷ்டிர சமிதி நேற்று தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. கட்சித் தலைவரும், முதல் மந்திரியுமான சந்திரசேகர ராவ் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தெலுங்கானாவில் பாரத ராஷ்டிர சமிதி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், தகுதியுள்ள பயனாளிகளுக்கு ரூ.400 விலையில் சமையல் கியாஸ் சிலிண்டர் வழங்கப்படும். மீதி தொகையை மாநில அரசு ஏற்றுக்கொள்ளும். வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள 93 லட்சம் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் காப்பீடு அளிக்கப்படும். அதற்கான பிரீமியம் தொகையை மாநில அரசு செலுத்திவிடும்.
‘ஆரோக்கிய ஸ்ரீ’ திட்டத்தின்கீழ், தகுதியுள்ள பயனாளிகளுக்கு தலா ரூ.5 லட்சம் சுகாதார காப்பீடு அளிக்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை ரூ.15 லட்சமாக உயர்த்தப்படும். சமூக பாதுகாப்பு ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வரும் ரூ.2,016 மாதாந்திர தொகை, 5 ஆண்டுகளில் ரூ.5 ஆயிரமாக உயர்த்தப்படும்.
முதல் ஆண்டிலேயே ரூ.3,016 ஆக அதிகரிக்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியம் தற்போதைய ரூ.4 ஆயிரத்து 16-ல் இருந்து 5 ஆண்டுகளில் ரூ.6 ஆயிரத்து 16 ஆக உயர்த்தப்படும். விவசாயிகளுக்கான முதலீட்டு பாதுகாப்பு திட்டத்தில், ஒரு ஏக்கருக்கு ஆண்டொன்றுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்படுகிறது. இத்தொகை 5 ஆண்டுகளில் படிப்படியாக ரூ.16 ஆயிரமாக உயர்த்தப்படும்.
நிச்சயமாக மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவோம். ஆட்சிக்கு வந்த 6 முதல் 7 மாதங்களிலேயே வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம். தனிநபர் வருமானம், மின்சார பயன்பாடு ஆகியவற்றில் தெலுங்கானா முதன்மை மாநிலமாக உருவெடுத்துள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.