ரூ.4 ஆயிரம் கோடி செலவு செய்தது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் – டாக்டர். அன்புமணி ராமதாஸ்
சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று மதுரை வந்த பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். பீகார், கர்நாடகாவில் சாதி வாரி கணக்கெடுப்பு நடந்துள்ளது. 2-க்கும் உள்ள வித்தியாசத்தை தமிழக அரசு புரிந்து கொள்ள வேண்டும். பின் தங்கி உள்ள மக்களை கண்டறிந்து சிறப்பு சலுகைகள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். இது தான் உண்மையான சமூக நீதி. சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தவில்லை என்றால் தி.மு.க. சமூக நீதி பற்றி பேசக்கூடாது.
சென்னையில் புயலுக்கு பிறகு இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை. பலர் பால், குடிநீர் கூட கிடைக்காமல் அவதியடைகிறார்கள். 2015-ம் ஆண்டு வந்த வெள்ளத்தை பார்த்த பிறகு இன்னும் தமிழக அரசு பாடம் கற்றுக்கொள்ளவில்லை. இனிமேலும் கற்றுக் கொள்ளப்போவதில்லை. தமிழக அரசு விலை நிலங்களை கைப்பற்றி நாசப்படுத்தி கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் 65 சதவீத தொழிற்சாலைகள் சென்னையில் இருந்து 100 கி.மீட்டர் சுற்றளவில் செயல்பட்டு வருகிறது.
சென்னையில் நீர்நிலைகளை தொழிலதிபர்களும், அரசும் தான் ஆக்கிரமிப்பு செய்துள்ளது. தமிழகத்தில் 300 ஏரிகள் காணவில்லை. அடுத்த தலைமுறைகளை பற்றி இவர்களுக்கு கவலையில்லை. ஆனால் அடுத்த தேர்தலை பற்றி தான் சிந்திக்கிறார்கள். சென்னை வெள்ள பாதிப்பு தடுப்பு பணிக்கு ரூ.4 ஆயிரம் கோடி செலவிட்டதாக முதலமைச்சர் கூறுகிறார். ஆனால் அமைச்சர் ரூ.1,900 கோடி செலவிட்டதாக சொல்கிறார். இதுகுறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
மதுரை வைகை ஆற்றில் ரசாயனக் கழிவுகள் கலக்கப்பட்டு வருகிறது. தென்மாவட்டங்களில் பட்டியலின மக்கள் தாக்கப்படுகிறார்கள் இது கண்டிக்கத்தக்கது. வருகிற பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி குறித்து பா.ம.க. நிலைப்பாட்டை விரைவில் அறிவிப்போம். சென்னை வெள்ள பாதிப்புக்கு பா.ம.க. சார்பாக ஒரு மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் 5 எம்.எல்.ஏ.க்களின் ஒரு மாத சம்பளத்தை கொடுக்கின்றோம்.
இவ்வாறு அவர் கூறினார்.