X

ரூ.25,000 கோடி கூட்டுறவு வங்கி மோசடி வழக்கு – அஜித் பவாரின் மனைவி விடுவிப்பு

மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 48 மக்களவைத் தொகுதிகளுக்கு 5 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே முதற்கட்டத் தேர்தலின்போது 5 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு முடிந்துவிட்டது.

மகாராஷ்டிராவில் வி.ஐ.பி தொகுதியாகக் கருதப்படும் பாராமதியில் சரத் பவார் மகள் சுப்ரியா சுலேயும், துணை முதல் மந்திரி அஜித் பவார் மனைவி சுனேத்ர பவாரும் போட்டியிடுகின்றனர். இந்த பாராமதி தொகுதிக்கு மே 7ஆம் தேதி மூன்றாம் கட்டத் தேர்தல் நடைபெறுகிறது.

இந்நிலையில், மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா பவார் மீதான ₹25,000 கோடி கூட்டுறவு வங்கி மோசடி வழக்கில், அவர் மீது குற்றமில்லை என்றும் வங்கிகளுக்கு பணம் இழப்பே இல்லை என்றும் வழக்கை மாநில பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை மூடியுள்ளது.

இதுகுறித்து உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா தலைவர் ஆனந்த் துபே கருத்து தெரிவித்துள்ளார். அதில், “பிரதமர் மோடி இந்தக் குற்றச்சாட்டை எழுப்பி, இது இது ஊழல் குடும்பம் என்று கூறினார். ஆனால், இன்று அவர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். குற்றம் சாட்டப்பட்டு பாஜகவில் இணைந்த தலைவர்கள் அனைவரும் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் எந்த குற்றச் செயலையும் பார்க்கவில்லை என மாநில பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை அறிக்கை சமர்ப்பித்துள்ளது” என அவர் கூறினார்.

2021-ம் ஆண்டு மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் நடந்த ரூ.25,000 கோடி ஊழல் தொடர்பாக விசாரிக்க, மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்த ஊழல் நடந்தபோது, தற்போது மகாராஷ்டிரா துணை முதல்வராக இருக்கும் அஜித் பவார் உட்பட, தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் இயக்குநர்களாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.