ரூ.25 ஆயிரம் கோடி மதிப்பாலன போதைப்பொருளுடன் பிடிபட்ட கப்பல் நடுக்கடலில் மூழ்கியதா?
பாகிஸ்தானில் இருந்து இந்திய கடல் வழியாக போதை பொருள் கடத்தப்படுவதாக உளவு துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை உளவு துறை இந்திய கடற்படைக்கும், போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவுக்கும் தெரிவித்தது. இதற்காக ஆபரேசன் சமுத்திரகுப்தா என்ற பெயரில் கடற்படை மற்றும் போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினர் இணைந்து வேட்டையில் இறங்கினர். இதில் பாகிஸ்தானில் இருந்து இந்திய கடல் பகுதிக்குள் நுழையும் கப்பல்களை கண்காணித்து வந்தனர். இதில் சந்தேகப்படும்படி வந்த கப்பல் ஒன்றை கடற்படை மற்றும் போதை பொருள் கடத்தல் பிரிவினர் இணைந்து விரட்டி சென்றனர்.
சினிமாவில் வருவது போல் நடுக்கடலில் இந்த சேசிங் சம்பவம் நடந்தது. ஒரு கட்டத்தில் கடற்படையினரிடம் சிக்கி கொண்ட கப்பலை போதை பொருள் கடத்தல் குழுவினர் சோதனை செய்தனர். அந்த கப்பலில் மெத்தாம் பேட்டமைன் எனப்படும் விலை உயர்ந்த போதை பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
சிறுசிறு மூட்டைகளில் மொத்தம் 2525 கிலோ போதை பொருள் இருந்தது. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சர்வதேச சந்தையில் இதன்மதிப்பு ரூ.25 ஆயிரம் கோடி எனக்கூறப்படுகிறது. இந்த போதைபொருளை அதிகாரிகள் கொச்சியில் உள்ள போதை பொருள் தடுப்பு பிரிவிடம் ஒப்படைத்தனர். அவர்கள் போதை பொருளை கைப்பற்றி கொச்சி அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர். மேலும் இந்த தகவலை கோர்ட்டுக்கும் தெரிவித்தனர்.
இது தொடர்பாக போதை பொருள் தடுப்பு பிரிவினர் கூறும்போது, பாகிஸ்தானை சேர்ந்த போதை பொருள் கடத்தல்காரன் ஹாஜி சலீம் என்பவருக்கு இச்சம்பவத்தில் தொடர்பு இருப்பதாகவும், அவரது குழுவினர்தான் போதை பொருளை கடத்தி வந்ததாகவும் தெரிவித்தனர்.
தற்போது ஹாஜி சலீம் குழுவை சேர்ந்த பாகிஸ்தானியர் ஒருவர் இந்திய போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினரிடம் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. அவர் மூலம் போதை பொருள் யாருக்காக கொண்டு வரப்பட்டது? இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார்? என்பதை கண்டுபிடிக்க அதிகாரிகள் குழு விசாரணையில் இறங்கி உள்ளனர்.
பாகிஸ்தான் வழியாக இந்தியாவுக்குள் போதை பொருளை கடத்தி வந்த பிரதான கப்பலை அதிகாரிகள் தாய் கப்பல் என்று குறிப்பிட்டனர். அந்த கப்பலில் இருந்து போதை பொருள் சிறுசிறு பார்சல்களாக பிரிக்கப்பட்டு அவை நடுக்கடலில் சிறிய ரக படகுகளில் ஏற்றப்பட்டு கரைக்கு கொண்டு வரப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இவ்வாறு போதை பொருளை ஏற்ற வந்த சிறிய படகுகளில் 3 படகுகள் கடற்படையிடம் சிக்கியதாகவும், 2 படகுகள் தப்பி சென்றுவிட்டதாகவும் கூறப்பட்டது. அந்த படகுகளை தேடிவருவதாக கடற்படை தெரிவித்தது.
இதற்கிடையே போதை பொருளை ஏற்றி வந்த பிரதான கப்பல் பற்றிய தகவல்களும் அதிகாரிகளால் வெளியிடப்படவில்லை. அந்த கப்பல் நடுக்கடலில் இருந்து மாயமாகி விட்டதா? அல்லது கடலில் மூழ்கிவிட்டதா? என்பதும் தெரியவில்லை. இதுபற்றி அதிகாரிகள் கூறும்போது, தாய் கப்பல் பற்றி விசாரணை நடந்து வருகிறது என்றனர்.