சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.227 கோடி மதிப்பிலான கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தமிழ்நாட்டின் வரலாற்று சிறப்பு மிக்க, முதல் வேளாண்மை நிதி நிலை அறிக்கையை வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் சட்டப்பேரவையில் தாக்கல் செய்த போது, ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து கிராமங்களிலும் ஒட்டுமொத்த வேளாண் வளர்ச்சியை உருவாக்கிட அனைத்து துறைகளின் ஒருங்கிணைப்புடன் கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்தார்.
இச்சீரிய திட்டத்தின் கீழ், அனைத்து கிராமங்களும் ஒட்டுமொத்த வளர்ச்சியடைந்து தன்னிறைவு பெற்ற கிராமங்களாக மாற வேண்டும் என்பதே நோக்கமாகும்.
முதலைமைச்சரின் பத்தாண்டு தொலைநோக்கு திட்டமான 11.75 இலட்சம் எக்டேர் நிலங்களை கூடுதலாக சாகுபடிக்கு கொண்டு வருதல். இருபோக சாகுபடி பரப்பினை 20 இலட்சம் எக்டராக உயர்த்துதல், உணவு தானியங்கள் மற்றும் தேங்காய், பருத்தி, சூரியகாந்தி, நிலக்கடலை பயிர்களின் ஆக்கத் திறனில் தேசிய அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்தல் ஆகிய தொலை நோக்குத் திட்டங்களை அடைந்திடும் வகையில் கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப் படுகிறது.
2021-22ஆம் ஆண்டில் 1,997 கிராமப் பஞ்சாயத்துக்களில் செயல்படுத்தப் படவுள்ள இத்திட்டத்தின் கீழ், தென்னங்கன்றுகள், பயறுவகை விதைகள், தெளிப்பான்கள், வீட்டுத் தோட்டம் அமைக்க காய்கறி தொகுப்புகள், தோட்டக்கலை பயிர்சாகுபடிக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும்.
பழக்கூடைகள் மற்றும் ட்ரம், பழச்செடிகள், மரக்கன்றுகள் தொகுப்புகள், தரிசு நிலத் தொகுப்புகளில் ஆழ்துளை/குழாய்க்கிணறு அமைத்தல், ஆதிதிராவிட விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் கிணறு அமைத்து மின் மோட்டாருடன் நுண்ணீர் பாசன வசதி அமைத்தல், பண்ணைக்குட்டை அமைத்தல், சிறுபாசன குளங்கள், குளங்கள், ஊரணிகள், வரத்து கால்வாய்கள் தூர்வாருதல் போன்ற செயல்பாடுகள் இக்கிராமப் பஞ்சாயத்துக்களிலும் செயல்படுத்தப்படும்.
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தினை முதலமைச்சர் தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு தரிசு தொகுப்பிற்குட்பட்ட விவசாய சங்க உறுப்பினர்களுக்கு ஆழ்துளைக் கிணறு அமைத்திட பணி ஆணை வழங்கினார்.
தென்னங்கன்றுகள், தோட்டக்கலை பயிர் சாகுபடி செய்திட ஊக்கத்தொகை, வரப்பு ஒரங்களில் பழச்செடிகள் மற்றும் மரக்கன்றுகள் நட்டிட மரக்கன்றுகள், ஆதிதிராவிட விவசாயிகளுக்கு 100 சதவிகித மானியத்தில் கிணறு அமைத்து மின் மோட்டாருடன் நுண்ணீர் பாசன வசதி அமைப்பதற்கான பணி ஆணை வழங்கினார்.
மேலும் பண்ணைக் குட்டை அமைப்பதற்காக ஆணை, அக்ரி கிளினிக் அமைக்க ஆணை ஆகியவற்றை வழங்கினார்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.