ஆக்கி இந்தியா மற்றும் தமிழ்நாடு அரசு இணைந்து நடத்தும் 7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் வருகிற 3-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை நடைபெறுகிறது. 16 ஆண்டுக்கு பிறகு சென்னையில் அரங்கேறும் இந்த சர்வதேச ஆக்கி போட்டியில் இந்தியா, சீனா, பாகிஸ்தான், மலேசியா, ஜப்பான், நடப்பு சாம்பியன் தென்கொரியா ஆகிய 6 நாடுகள் பங்கேற்கின்றன. முதல் அணியாக மலேசிய அணி இன்று சென்னை வருகிறது.
இந்த போட்டியை சிறப்பாக நடத்துவதற்காக தமிழக அரசின் சார்பில் ரூ.17.33 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும் ரூ.16 கோடி மதிப்பீட்டில் ராதாகிருஷ்ணன் விளையாட்டு ஸ்டேடியத்தில் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகள் தரத்திலான முதன்மை ஆக்கி செயற்கை இழை ஆடுகளம், வீரர்கள் பயிற்சி செய்வதற்கான செயற்கை இழை ஆடுகளம் மற்றும் இணைப்பு பணிகள், பார்வையாளர்களுக்கான இருக்கை வசதிகள், சிறப்பு விருந்தினர்கள் அமருவதற்கான பார்வையாளர் மாடம், விளையாட்டு வீரர்களுக்கு அறைகள், மின்னொளி வசதிகள், நவீன கழிப்பிட வசதிகள் மற்றும் பிற சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த சீரமைப்பு பணிகள் முடிவடைந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேம்படுத்தப்பட்ட ஆக்கி விளையாட்டு ஸ்டேடியம், ஒலிம்பிக் தரத்திலான புதிய செயற்கை இழை மைதானம் மற்றும் கலைஞர் நூற்றாண்டு பார்வையாளர் மாடம் ஆகியவற்றை நேற்று திறந்து வைத்தார்.
ஆக்கி போட்டியின் நினைவாக நுழைவு வாயில் முகப்பில் ஆக்கி வீரர், வீராங்கனை விளையாடுவது போன்ற சிலை அமைக்கப்பட்டுள்ளது. அதையும் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளர் மேகநாதரெட்டி, ஆக்கி இந்தியா தலைவர் திலீப் திர்கே, பொருளாளர் சேகர் மனோகரன், இந்திய ஆக்கி அணி தேர்வாளர் முகமது ரியாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.