1965 ஆஸ்டன் மார்டின் டிபி5 பாண்ட் கார் ஏலத்தில் சுமார் 63,85,000 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 45.37 கோடி) ஏலம் போனது. ஆடம்பர பொருட்களை ஏலத்தில் விடும் சோத்பிஸ் நடத்திய ஏலத்தில் இந்த வாரம் 1965 ஆஸ்டன் மார்டின் டிபி5 பாண்ட் கார் ஏலத்திற்கு வந்தது.
ஈவ்னிங் வித் ஆஸ்டன் மார்டின் என்ற பெயரில் ஏல நிகழ்வை சோத்பிஸ் ஏல நிறுவனம் நடத்தியது. இதேபோன்று நிகழ்வை சோத்பிஸ் ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது. முன்னதாக இதே மாடல் 20,00,000 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 14.21 கோடி) விலைக்கு ஏலம் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏல முடிவில் இதுவரை வெளியானதிலேயே அதிக மதிப்புமிக்க டிபி5 என்ற பெருமையை 1965 ஆஸ்டன் மார்டின் டிபி5 பாண்ட் கார் பெற்றது. உலகின் பிரபல கார் மாடலாக அறியப்படும் டிபி5 DB5/2008/R எனும் சேசிஸ் நம்பரை கொண்டிருக்கிறது.
இது இயான் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்திற்கு என பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட கார் ஆகும். இதில் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் நிபுணர் ஜான் ஸ்டியர்ஸ் கைவண்ணத்தில் உருவான அனைத்து மாடிஃபிகேஷன்களும் செய்யப்பட்டுள்ளன. சுவிட்சர்லாந்தின் ரூஸ் என்ஜினியரிங் மூலம் முழுமையாக புதுப்பிக்கப்பட்ட இந்த கார் மானடெரியில் காட்சிப்படுத்தப்பட்டது.
ஏலத்தில் பங்கேற்க ஆறு பேர் விருப்பம் தெரிவித்தனர். இவர்கள் ஒரே அறை மற்றும் தொலைபேசி மூலம் ஏலத்தில் கலந்து கொண்டனர். ஏலத்தில் 1965 ஆஸ்டன் மார்டின் டிபி5 பாண்ட் கார் 4 நிமிடங்கள் 30 நொடிகளில் விற்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.