X

ரூ.1000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு! – விநியோகம் தொடங்கியது

பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக அரசு சார்பில் ஏழை எளியவர்களுக்கு ரூ.1000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது.

பச்சரிசி, வெல்லம், திராட்சை, முந்திரி, ஏலக்காய் ஆகியவற்றுடன் கரும்புத்துண்டு ஒன்றும் வழங்கப்படுகிறது. பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நவம்பர் 29-ந்தேதி தொடங்கி வைத்தார்.

இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் ரேசன் கடைகளில் இன்று முதல் வினியோகிக்கப்படுகிறது. ஒவ்வொரு ரே‌ஷன் கடைகளுக்கு உட்பட்ட தெருக்கள் வாரியாக பிரிக்கப்பட்டு கூட்ட நெரிசல் இல்லாமல் வழங்க திட்டமிடப்பட்டது.

பொங்கல் பரிசு இன்று காலை 9 மணி முதல் அனைத்து ரேசன் கடைகளிலும் வழங்கப்பட்டது. இதை வாங்குவதற்காக பொது மக்கள் அதிகாலை முதலே ரேசன் கடைகளில் திரண்டனர்.

வயதானவர்கள், பெண்கள் அதிகாலை 4 மணிக்கே ரேசன் கடை வாசலில் வரிசையில் நிற்க தொடங்கினார்கள்.

தமிழகம் முழுவதும் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரேசன் கடைகளில் ரூ.1000 ரொக்கத்துடன்கூடிய பொங்கல் பரிசு இன்றுமுதல் வழங்கப்பட்டது.

சென்னையில் உள்ள 1300 ரேசன் கடைகளிலும் பரிசு தொகுப்பு வாங்குவதற்காக பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. பைகளுடன் நீண்ட வரிசையில் காத்து நின்று பரிசு தொகுப்பை வாங்கினர்.

ரூ.1000 ரொக்கத்துடன், பொங்கல் வைப்பதற்காக பொருட்களை ஏழை-எளிய மக்கள் மகிழ்ச்சியுடன் வாங்கி சென்றனர்.

பொங்கல் பரிசாக வழங்கப்பட்ட ரூ. 1000 ரொக்கம் இரண்டு 500 ரூபாய் தாளாக, கவர் எதுவும் இல்லாமல் வெளிப்படையாக வழங்கப்பட்டது.

குடும்ப அட்டைதாரர்கள் கையொழுத்திட்டவுடன் அவரது செல்போன் நம்பருக்கு பணபரிமாற்றத்துக்கான குறுஞ்செய்தி சென்றுவிடுகிறது. ஏலக்காய், முந்திரி, திராட்சை ஆகியவை தனித்தனி காகித கவரில் பேக்கிங் செய்யப்பட்டு இருந்தது. அந்த கவர்கள் முன்பு பிளாஸ்டிக் கவரில் வழங்கப்பட்டு வந்த நிலையில் இம்முறை அது தவிர்க்கப்பட்டது. ஏலக்காய், முந்திரி, திராட்சை ஆகிய 3 கவர்களையும் இணைத்து வழங்கப்பட்டது.

ஒவ்வொரு ஸ்மார்ட் கார்டுடன் ஆதார் கார்டையும் கொண்டு வந்திருந்தனர். ஸ்மார்ட் கார்டில் பெயர், புகைப்படம் இருப்பவர்கள் தான் வாங்குகிறார்களா என்பதை ஊழியர்கள் சரிபார்த்து கையெழுத்து பெறப்பட்டு பொருட்களை கொடுத்தனர்.

குடும்ப தலைவர் வராமல் அந்த குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் வரும்போது அதனை சரிபார்த்து பரிசு பொருட்களை வழங்கினர். குடும்பத்திற்கு தொடர்பு இல்லாதவர்கள் கொண்டு வந்த கார்டுகளை திருப்பி அனுப்பினார்கள்.

சர்க்கரை கார்டில் இருந்து அரிசி கார்டாக மாற்றிய ஏராளமான பொதுமக்களும் பொங்கல் பரிசு தொகுப்பை வாங்கினர்.

பொங்கல் பரிசு வினியோகத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள ரே‌ஷன் கடைகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பொதுமக்களை வரிசையில் நிறுத்தி நெரிசல் இல்லாமல் வாங்கி செல்வதற்கு உதவி செய்தனர்.

ஒவ்வொரு ரேசன் கடைகளிலும் தினமும் 300 குடும்ப அட்டைகளுக்கு இந்த பொங்கல் தொகுப்பு வழங்கப்படுகிறது. வருகிற 12-ந்தேதி வரை 4 நாட்களுக்கு அனைத்து கார்டுகளுக்கும் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது.

இந்த 4 நாட்களில் வாங்காமல் விடுபட்டவர்களுக்கு 13-ந்தேதி வழங்கப்படும். சந்தேகத்திற்கு உட்பட்ட, பிரச்சனைகளால் நிறுத்தி வைக்கப்படுகிற கார்டுகளுக்கும் 13-ந்தேதி பரிசு தொகுப்பு வினியோகிக்கப்படும்.

Tags: south news