X

ரூ.1000 திட்டம் சாதனை அல்ல – சீமான் பேச்சு

சென்னை அயனாவரத்தில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்டத்திற்கு பிறகு கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களிடம் கூறியதாவது:-

மகளிருக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கும் திட்டத்தை சாதனையான திட்டம் என்றோ? மக்களுக்கான சேவை என்றோ? கூற முடியாது. ½ நூற்றாண்டுகளுக்கும் மேலாக மாறி மாறி 2 திராவிட கட்சிகளும் தான் ஆட்சி செய்கிறது. மிகவும் அற்பமான, சொற்பத்தொகையான ஆயிரம் ரூபாய்க்கு கூட மக்களை கையேந்தும் வகையில் தான் இந்த ஆட்சியாளர்கள் வைத்திருக்கிறார்கள்.

ரூ.10 ஆயிரம் கோடி, ரூ.12 ஆயிரம் கோடி எதற்காக செலவு செய்கிறார்கள்? மகளிர் யாருமே ஆயிரம் ரூபாய் கொடுங்கள் என்று கேட்கவில்லை. சாலையை சரியாக கொடுங்கள். தூய குடிநீரை கொடுங்கள் என்றுதான் கேட்கிறார்கள். இதுதான் வளர்ச்சியா? ஆயிரம் ரூபாய்க்கு கையேந்தும் மக்கள் நாளை 5 ஆயிரம் ரூபாய்க்கு கையேந்துவார்களா? என் மக்களை இத்தனை ஆண்டுகளாக இலவசத்துக்கு கையேந்துபவர்களாக, பிச்சைக்காரர்களாக மாற்றி இருக்கிறீர்களே தவிர வளர்ச்சி அடைய வைக்கவில்லை.

இந்த ஆயிரம் ரூபாயை பெறுகிற பெண்கள் என்ன வளர்ச்சியை கண்டுவிடுவார்கள். மின்கட்டணம் என்ன விலைக்கு உயர்ந்துள்ளது. சமையல் கியாஸ் சிலிண்டர் விலை என்ன? அரிசி, பருப்பு, பால், நெய் விலை எவ்வளவு? இந்த ஆயிரம் ரூபாய் திட்டத்திற்கு 10 ஆயிரம் கோடி செலவாகிறது என்றால் இந்த பணம் யாரிடமிருந்து எடுத்தீர்கள்? கலைஞர் உரிமை திட்டம் என்கிறீர்களே? இது என்ன கலைஞர் பணமா? இதற்கு முதலமைச்சர் பதில் சொல்வாரா?

இவ்வாறு அவர் கூறினார்.

Tags: tamil news