ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உலகம் முழுவதும் 10000-க்கும் மேலான தியேட்டர்களில் ரிலீசான 2.0 படம் முதல் நான்கு நாட்களிலேயே ரூ.400 கோடி வசூலித்ததாக அறிவிக்கப்பட்டது.
அடுத்த சில நாட்களிலேயே படம் ரூ.500 கோடி வசூல் என்று அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்புகளுக்கு பின்னரும் படம் தமிழகம் முழுவதும் 398 திரைகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் வெளிநாடுகளிலும் படம் ஓடிக்கொண்டிருக்கிறது.
இங்கிலாந்து, மலேசியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் வசூல் சாதனையை ஏற்படுத்தி இருப்பதாக தயாரிப்பு தரப்பில் சொல்லப்படுகிறது. சென்னையில் தெலுங்கு, இந்தி மொழிகளிலும் ஓடிக் கொண்டிருக்கின்றது.
சென்னை மாநகரில் மட்டும் 3-வது வாரமாக சுமார் 80 திரைகளில் 2.0 ஓடிக்கொண்டிருக்கிறது. தற்போது சென்னையில் வசூல் ரூ.30 கோடியை தாண்டிவிட்டதாக சொல்கிறார்கள். சென்னையை பொறுத்த வரை இது சாதனை வசூல் ஆகும். இதற்கு முன்பு கபாலி 3-வது வாரத்தில் சென்னையில் வசூல் செய்த ரூ.18 கோடி சாதனையாக பார்க்கப்பட்டது.
உலகம் முழுவதும் தமிழ் மொழி பதிப்பில் ரூ.461 கோடியையும் தெலுங்கு, இந்தி பதிப்புகள் சேர்ந்து ரூ.285 கோடியையும் வசூலித்திருப்பதாக கூறுகின்றனர். மொத்த வசூல் ரூ.750 கோடியை கடந்திருப்பதாக கூறுகின்றனர்.
தமிழகத்தில் அரையாண்டு விடுமுறைக்குப் பின்னும், உலக அளவில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறையினாலும் சுலபமாக ரூ.1000 கோடியை தொடும் என நம்பிக்கை தெரிவிக்கிறார்கள். அப்படி தொட்டால், அது இந்திய சினிமாவின் பெரும் சாதனையாக கருதப்படும்.
2.0 படம் நேற்று வரை தியேட்டர்களில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. முக்கியமாக 3டி வசதி கொண்ட தியேட்டர்களில் வேலை நாட்களிலும் கூட்டம் வருகிறது. 2டி பதிப்பை விட 3டி வசதியில் படத்தை பார்க்கவே ரசிகர்கள் விரும்புகின்றனர். எனவே 2டி பதிப்புக்கு வரவேற்பு குறைந்துவிட்டது.
இந்த வாரம் மட்டும் விஜய் சேதுபதி, தனுஷ், ஜெயம் ரவி, சிவகார்த்திகேயன், விஷ்ணு விஷால் என பெரிய கதாநாயகர்களின் படங்கள் வருகின்றன. 2.0 படம் ஓடிக்கொண்டிருப்பதால் அவர்களின் படங்களுக்கு தியேட்டர்கள் ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.