X

ரூ.1000 கோடிக்கு மேல் சொத்து வைத்திருப்பவர் பீகாரில் சுயேட்சையாக போட்டி

இந்தியாவில் உள்ள 543 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் பற்றிய பின்னணி தகவல்களை ஜனநாயக சீர்திருத்த கழகம் என்ற அமைப்பு ஆய்வு செய்தது.

அந்த ஆய்வில் எத்தனை வேட்பாளர்கள் கோடீஸ்வரர்கள்? எத்தனை வேட்பாளர்கள் கிரிமினல்கள்? எத்தனை வேட்பாளர்கள் ஏழைகளாக இருக்கிறார்கள்? என்பன போன்ற விவரங்கள் தெரிய வந்துள்ளன.

அந்த ஆய்வில் இந்தியாவிலேயே பணக்கார வேட்பாளர் யார் என்ற ஆய்வும் மேற்கொள்ளப்பட்டது. அதில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ரமேஷ்குமார் சர்மா என்பவர்தான் நாட்டிலேயே மிகப்பெரிய பணக்கார வேட்பாளர் என்பது தெரிய வந்துள்ளது.

அவரது மொத்த சொத்து மதிப்பு ரூ.ஆயிரத்து 100 கோடி என்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் சொத்து வைத்திருக்கும் இவர் எந்த கட்சியிலும் சேரவில்லை.

சுயேட்சையாக பாடலி புத்ரா தொகுதியில் போட்டியிடுகிறார். தேர்தலுக்காக இவர் கணிசமான அளவுக்கு பணத்தை செலவு செய்து இருப்பதாக தெரிய வந்துள்ளது.

நாட்டிலேயே 2-வது பெரிய பணக்கார வேட்பாளராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கொண்ட விஸ்வேஸ்வர ரெட்டி உள்ளார். தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த செவல்லா தொகுதியில் போட்டியிடுகிறார்.

இவரது சொத்து மதிப்பு 895 கோடி ரூபாய் ஆகும். மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த நகுல்நாத் 3-வது பணக்கார வேட்பாளர் ஆவார். இவரது சொத்து ரூ.660 கோடியாகும்.

தமிழ்நாட்டில் பணக்கார வேட்பாளராக கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் உள்ளார்.