Tamilசினிமா

ரூ.100 கோடி வசூலித்த ‘அசுரன்’!

2002 ஆம் ஆண்டில் துள்ளுவதோ இளமை படத்தில் அறிமுகமான தனுஷ், தொடர்ந்து 17 வருடங்களாக பல வெற்றி படங்களை கொடுத்திருந்தாலும் 100 கோடி கிளப்பில் இதுவரை அவரது படங்கள் இடம்பெறாமல் இருந்தது. தற்போது, அசுரனின் வெற்றி அதை சாத்தியமாக்கி இருக்கிறது.

பூமணி எழுதிய வெக்கை நாவலை அடிப்படையாக கொண்டு வெற்றிமாறன் உருவாக்கிய அசுரன் படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்திருக்கிறார். இப்படத்தில் மஞ்சு வாரியர், அபிராமி, பசுபதி, பிரகாஷ் ராஜ், பாலாஜி சக்திவேல், கருணாஸ் மகன் கென், ‘ஆடுகளம்’ நரேன், டி.ஜே, பவன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கடந்த அக்டோபர் 4ந்தேதி வெளியான அசுரன் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.

தீண்டாமை உள்ளிட்ட அடக்குமுறைக்கு எதிராக பேசிய இப்படம் சமூக வலைதளங்களில் விவாதக்களமாக மாறியது. இந்நிலையில், அசுரன் 100 கோடி கிளப்பில் இணைந்துள்ளது. தனுஷ் நடிப்பில் 100 கோடி கிளப்பில் இணையும் முதல் படம் அசுரன். அசுரனின் பாக்ஸ் ஆபிஸ் குறித்த தகவல்கள் அறிந்ததும் இந்த வெற்றியை பெரிய அளவில் கொண்டாட முடிவெடுத்திருக்கிறார் தயாரிப்பாளர் எஸ்.தாணு.

மேலும் அசுரன் 100 கோடி வசூலித்ததன் மூலம் தனுஷ் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் ஆகிய மூன்று திரையுலகிலும் ரூ.100 கோடி வசூல் படங்களை கொடுத்த ஒரே நடிகர் என்ற பெருமையை தனுஷ் பெற்றுள்ளார். தனுஷ் நடித்த ஹாலிவுட் படமான ’பக்கிரி’, பாலிவுட் படமான ‘ராஞ்சனா’ ஆகிய திரைப்படங்கள் ஏற்கனவே ரூ.100 கோடி வசூல் செய்துள்ள நிலையில், கோலிவுட்டில் தற்போது அசுரன் படமும் ரூ.100 கோடி வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *