சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பகுதியைச் சேர்ந்தவர் அர்ஷத் (வயது 36). டெய்லரான இவர், சொந்தமாக பேக் கம்பெனி வைக்க முடிவு செய்தார். இதற்கான பொருட்கள் வாங்க சிலரிடம் கடனாக ரூ.10 லட்சம் வாங்கிய அவர், கடந்த மாதம் 5-ந்தேதி மதுரை-தேனி ரோட்டில் நாகமலைபுதுக்கோட்டை பகுதியில் மாவுமில் பஸ் நிறுத்தம் அருகே நின்றிருந்தார். அப்போது, ஏற்கனவே வாங்கிய கடன் ரூ.10 லட்சத்தையும் கையில் வைத்திருந்தார்.
இந்தநிலையி்ல அங்கு போலீஸ் வாகனத்தில் வந்த மதுரை நாகமலைபுதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தி, அவருடைய தம்பி பாண்டியராஜன், மற்றும் பால்பாண்டி, உக்கிரபாண்டி, சீமைச்சாமி ஆகியோர் அர்ஷத்தை மிரட்டி அவர் வைத்திருந்த ரூ.10 லட்சத்தை பையோடு பறித்துச்சென்றனர்.
இதுகுறித்து அர்ஷத், மாவட்ட குற்ற தடுப்புப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் பெண் இன்ஸ்பெக்டர் வசந்தி உள்ளிட்ட 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும், அன்றைய தினமே வசந்தி பணியிடை நீக்கம் செய்யப்பட்டதால் தலைமறைவானார்.
இந்த வழக்கை தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அதே நேரத்தில் தனக்கு முன்ஜாமீன் வழங்கக்கோரி வசந்தி, மதுரை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.
இது ஒரு புறம் இருக்க கடந்த 13-ந்தேதி இந்த வழக்கில் தொடர்புடைய 5 பேரில் பால்பாண்டி, உக்கிரபாண்டி, சீமைச்சாமி ஆகிய 3 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2 லட்சத்து 26 ஆயிரம் மீட்கப்பட்டது.
முன்ஜாமீன் கேட்டு இருந்த இன்ஸ்பெக்டர் வசந்தியின் மனுவை மதுரை ஐகோர்ட்டு சில தினங்களுக்கு முன்பு தள்ளுபடி செய்தததுடன் அவரை ஏன் இன்னும் கைது செய்யவில்லை? என கேள்வியும் எழுப்பியது. இதனால் வசந்தியை கைது செய்ய போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு, அவரது செல்போன் அழைப்புகளை கண்காணித்தனர். அவரும் ஒரே செல்போன் எண்ணை பயன்படுத்தாமல் வேறு, வேறு எண்களில் இருந்து உறவினர்களை தொடர்பு கொண்டு வந்ததால் போலீசாருக்கு குழப்பமும் ஏற்பட்டது.
இந்த நிலையில் நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உள்ள ஒரு லாட்ஜில் தங்கி இருந்த இன்ஸ்பெக்டர் வசந்தி, அவருடைய தம்பி பாண்டியராஜன் ஆகியோரை தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். இதையடுத்து இருவரும் மதுரை மாவட்ட கூடுதல் மகளிர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். வருகிற 9-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து அவர்கள் 2 பேரும் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை கிளைச்சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அடைக்கப்பட்டனர்.
வசந்தி சிக்கியது எப்படி? என்பது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
அர்ஷத்திடம் இன்ஸ்பெக்டர் வசந்தி ரூ.10 லட்சத்தை பறித்துள்ளார். ஆனால் அர்ஷத் முறைகேடான வழியில் அந்த பணத்தை இரட்டிப்பு செய்ய வேண்டும் என நினைத்து கொண்டு வந்ததாகவும், இதை தெரிந்துதான் வசந்தி அங்கு சென்று அதனை பறித்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. முறைகேடான பணபரிவர்த்தனைக்கு ரூ.10 லட்சத்தை எடுத்து வந்ததால் அர்ஷத் போலீசிடம் செல்லமாட்டார் என்ற நம்பிக்கையில்தான் இந்த துணிகர பணப்பறிப்பை வசந்தி செய்துள்ளார். ஆனால், அர்ஷத் நேராக போலீஸ் சூப்பிரண்டிடம் சென்று முறையிட்டு, சம்பவத்தை விளக்கியதால் வசந்தி மீதான பிடி இறுகி, தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.