ருதுராஜ் கெய்க்வாட் விளையாடும் போது எதிரணிக்கு பயம் இருக்கும் – ராஜஸ்தான் கேப்டன் பேட்டி
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு அபுதாபியில் நடந்த லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ருதுராஜ் கெய்க்வாட்டின் சதத்தின் (101 ரன்) உதவியுடன் 189 ரன்கள் குவித்த போதிலும், அந்த இலக்கை ராஜஸ்தான் ராயல்ஸ் 17.3 ஓவர்களில் எட்டிப்பிடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் பிரமிக்கத்தக்க வெற்றியை பெற்றது. ஜெய்ஸ்வால் 50 ரன்களும் (21 பந்து, 6 பவுண்டரி,3 சிக்சர்), ஷிவம் துபே 64 ரன்களும் (42 பந்து, 4 பவுண்டரி, 4 சிக்சர்) நொறுக்கினர்.
வெற்றிக்கு பிறகு ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் கூறுகையில், ”எங்களது இளம் வீரர்களின் பேட்டிங் திறமை பற்றி நாங்கள் அறிவோம். அதனால் தான் தோற்கும் போது நாங்கள் மிகுந்த ஏமாற்றம் அடைகிறோம். எங்களது தொடக்க ஆட்டக்காரர்கள் ‘பவர்-பிளே’யிலேயே (முதல் 6 ஓவர்களில் 81 ரன்) கிட்டத்தட்ட ஆட்டத்தை முடித்து விட்டனர். ஜெய்ஸ்வால் அருமையாக ஆடினார். அடுத்து வரும் ஆட்டங்களில் இதை அவர் பெரிய ஸ்கோராக மாற்றுவார் என்று நம்புகிறேன். ருதுராஜ் கெய்க்வாட் பேட்டிங் செய்த விதம் நம்ப முடியாத அளவுக்கு இருந்தது. அவரை போன்ற ஒரு பேட்ஸ்மேன் விளையாடும் போது நிச்சயம் எதிரணிக்கு பயம் இருக்கும். கிரிக்கெட்டுக்கே உரிய ஷாட்டுகளை ஆடுகிறார். அது மட்டுமின்றி எந்தவித ரிஸ்க்கும் இன்றி ரன் சேர்க்கிறார். இது போன்ற பேட்ஸ்மேனுக்கு நாம் மதிப்பு கொடுக்க வேண்டும். அவர் சதம் அடித்தது மகிழ்ச்சியே.” என்றார்.
சென்னை கேப்டன் டோனி கூறுகையில், ”ஆரம்பத்தில் டாஸில் தோற்றதே மோசம் தான். பனியின் தாக்கத்தால் போக போக ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக மாறியது. ராஜஸ்தான் அணியினர் உண்மையிலேயே நன்றாக பேட் செய்தனர். ‘பவர்-பிளே’யிலேயே வெற்றி வாய்ப்பை பறித்து விட்டனர். இது போன்ற ஆடுகளத்தில் 250 ரன்கள் வரை எடுத்தால் தான் நல்ல ஸ்கோராக இருக்கும் போல.” என்றார்.
ஐ.பி.எல். வரலாற்றில் சென்னை அணி தரப்பில் இதுவரை 9 சதங்கள் பதிவாகியுள்ளன. இதில் ருதுராஜ் சதம் மட்டுமே தோல்வியில் முடிந்திருப்பது குறிப்பிடத்தக்கது.