X

ரீல் மோகத்தால் 300 அடி பள்ளத்தில் பலியான இளம் பெண்!

மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் அனுமன் நகர் பகுதியை சேர்ந்தவர் சுவேதா சுர்வாசே(வயது23). இவர் சுரஜ் முலே(25) என்ற வாலிபரை காதலித்து வந்ததாக தெரிகிறது. அவருடன் இளம்பெண் காரில் அவுரங்காபாத், சுலிபஞ்சன் மலைக்கு சென்றார். மதியம் 2 மணியளவில் தத்தாதாம் கோவில் அருகில் சுவேதா சுர்வாசே, காதலனின் காரை பின்னால் நோக்கி ஓட்டினார். சரியாக கார் ஓட்ட தெரியாத போதும், சமூகவலைதளத்தில்(ரீல்ஸ்) பதிவிட கார் ஓட்டுவது போல இளம்பெண் வீடியோ எடுத்ததாக தெரிகிறது.

சுவேதா சுர்வாசே பின்னால் நோக்கி காரை ஓட்ட, காதலன் சுரஜ் முலே செல்போனில் படம் பிடித்து உள்ளார். அப்போது இளம்பெண் காரை சற்று வேகமாக ஓட்டி உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த காதலன் ‘பிரேக்கை’ பிடிக்குமாறு இளம்பெண்ணை எச்சரித்தப்படி, காரை நோக்கி வேகமாக ஓடினார். ஆனால் இளம்பெண் காரை நிறுத்த பிரேக்கிற்கு பதிலாக ஆக்சிலேட்டரை மிதித்ததாக தெரிகிறது. இதனால் வேகமாக பின்நோக்கி சென்ற கார், 50 மீட்டர் தூரத்தில் இருந்த 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.
மலையில் வேகமாக கீழே உருண்ட கார் சுக்குநூறாக நொறுங்கியது.

சில வினாடிகளில் நடந்த இந்த பயங்கர சம்பவத்தை பார்த்து, அங்கு இருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் மலை பள்ளத்தாக்கில் இறங்கி காரில் படுகாயங்களுடன் கிடந்த இளம்பெண்ணை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இளம்பெண்ணை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினார்.

சம்பவம் குறித்து குடாபாத் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், “இளம்பெண் ஓட்டிய கார் பின்னோக்கி வேகமாக சென்று, தடுப்பு வேலியை உடைத்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து உள்ளது. கார் விழுந்த இடத்தை கண்டுபிடித்து செல்லவே மீட்பு குழுவினருக்கு 1 மணி நேரம் ஆகிவிட்டது” என்றார்.

இளம்பெண் காரை பின்னோக்கி ஓட்டும் வீடியோ காட்சி தற்போது சமூகவலைதளங்களில் வேகமாக பரவிவருகிறது. ரீல்ஸ் மோகத்தில் காரை ஓட்ட முயற்சி செய்து காதலன் கண்முன்னே இளம்பெண் உயிரிழந்த சம்பவம் பொதுமக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.