X

ரீல்ஸ் மோகத்தில் வாலிபர்கள் செய்த விபரீத செயல்! – வைரலாகும் வீடியோ

இன்றை நவீன காலத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சமூக வலைதளங்களில் மூழ்கி கிடக்கின்றனர். அதிக பார்வையாளர்கள் தங்கள் வீடியோக்களை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இளைஞர்கள் வித்தியாசமான வீடியோக்களை உருவாக்கி இணையத்தில் பதிவேற்றி வருகிறார்கள். சிலர் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் செயல்களை செய்து அதனை இணையத்தில் பதிவிடுகின்றனர்.

ரெயில் செல்லும்போது தண்டவாளத்தில் நின்று வீடியோ எடுப்பது, மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்று வீலிங் செய்வது உள்ளிட்ட வரம்பு மீறிய செயல்களால் சில நேரங்களில் உயிரிழப்பும் ஏற்படுகிறது.

இந்த நிலையில் வாலிபர்கள் சிலர் ரீல்ஸ் மோகத்தால் ஆற்றில் பெட்ரோலை ஊற்றி எரித்து அதில் குதிப்பது போன்ற வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆற்றுப்பகுதிக்கு செல்லும் 4 வாலிபர்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த பெட்ரோலை ஆற்றுக்குள் பெட்ரோலை வட்டமாக ஊற்றுகின்றனர். பின்னர் அதில் ஒரு வாலிபர் தீக்குச்சியை கொளுத்தி அதில்போட வட்ட வடிவில் தீ குபீரென்று எரிய தொடங்கியது.
அந்த நேரத்தில் அருகில் இருந்த சுவற்றில் ஏறியிருந்த வாலிபர் ஒருவர் அந்த தீயில் குதிக்கிறார். சிறிது நேரத்தில் தீ அணைந்து விட அந்த வாலிபர் தண்ணீரில் இருந்து வெளியேறுகிறார். இன்ஸ்டாகிராமில் பதிவேற்றப்பட்டுள்ள இந்த வீடியோ தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியில் உள்ள தாமிரபரணி ஆறு என குறிப்பிடப்பட்டு உள்ளது. இதுபோன்ற செயல்களால் நீர்நிலைகளுக்கும் அதில் வாழும் மீன்களுக்கும் பாதிப்பு ஏற்படும்.

ஆபத்தான முறையில் பெட்ரோலை ஊற்றி இதுபோன்ற சாகச செயல்களில் ஈடுபட்ட நபர்களுக்கு பலர் இணையத்தில் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோ சிலருக்கு தவறான முன்னுதாரணமாகி விடும். எனவே சம்பந்தப்பட்டவர்களை போலீசார் உடனே கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.