ரிஷப் பந்தை தேர்வு செய்யாதது ஆச்சரியமாக இருக்கிறது – கவாஸ்கர் கருத்து
12-வது உலக கோப்பை (50 ஓவர்) கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் மே 30-ந் தேதி முதல் ஜூலை 14-ந் தேதி வரை நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, போட்டியை நடத்தும் இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா உள்பட 10 நாடுகள் பங்கேற்கின்றன. இந்த போட்டிக்கான நியூசிலாந்து அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது.
இந்த நிலையில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியை தேர்வு செய்வதற்கான இந்திய கிரிக்கெட் வாரிய தேர்வு குழு கூட்டம் அதன் தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையில் மும்பையில் நேற்று பிற்பகலில் நடந்தது. முன்னதாக தேர்வு குழு தலைவரை, கேப்டன் விராட்கோலி சந்தித்து பேசினார்.
தேர்வு குழு கூட்டம் முடிவில் உலக கோப்பை போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டது.
உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் இடம் பெறவில்லை.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர் இது தொடர்பாக கூறுகையில், ‘ரிஷப் பந்த் நல்ல பார்மில் இருக்கிறார். ஐ.பி.எல். போட்டியில் மட்டுமின்றி அதற்கு முந்தைய போட்டிகளிலும் பேட்டிங்கில் அவர் சிறப்பாக செயல்பட்டுள்ளார். அத்துடன் விக்கெட் கீப்பிங்கிலும் நல்ல முன்னேற்றம் கண்டு வருகிறார். அவரை உலக கோப்பைக்கான இந்திய அணியில் சேர்க்காதது ஆச்சரியம் அளிக்கிறது’ என்றார்.