இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவர் ரிஷப்பண்ட். விக்கெட் கீப்பரான அவர் ஆஸ்திரேலியா, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவராக அவர் இருக்கிறார்.
இந்தநிலையில் இந்திய அணிக்காக ரிஷப்பண்ட் 100 டெஸ்டில் விளையாடுவார் என்று தினேஷ் கார்த்திக் நம்பிக்கை தெரிவித்து உள்ளார். தமிழகத்தை சேர்ந்த அவர் இதுதொடர்பாக கூறியதாவது:-
கடந்த சில மாதங்களாக ரிஷப்பண்ட் பிரமாதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவர் இக்கட்டான நேரங்களில் சிறப்பாக விளையாடி அணியை காப்பாற்றி இருக்கிறார்.
எந்த போட்டியாக இருந்தாலும் அவரது ஆட்டம் பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.
மேலும் ரிஷப்பண்ட்டுக்கு சவால்கள் மிகவும் பிடிக்கும் என்று நினைக்கிறேன். அதுதான் அவர் தொடர்ந்து சிறப்பாக செயல்பட உறுதுணையாக இருக்கிறது.
2 ஆண்டுக்கு முன்பு நடந்த ஐ.பி.எல். போட்டியில் எலிமினேட்டர் ஆட்டத்தில் அவர் தனி ஒருவராக நின்று டெல்லி அணிக்கு வெற்றி தேடி தந்தார். இதுபோல பல நெருக்கடியான போட்டிகளில் ரன்களை எடுத்து இருக்கிறார்.
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து தொடர்களில் அவர் தன்னுடைய திறமையை நிரூபித்து இருக்கிறார். ரிஷப்பண்ட் இந்திய அணியில் தொடர்ந்து இடம் பெறுவார் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. அவர் நிச்சயமாக 100 டெஸ்டுகளில் விளையாடுவார்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்திய அணிக்கு 3 வடிவிலான போட்டிகளிலும் (டெஸ்ட், ஒருநாள் போட்டி, 20 ஓவர்) விளையாடிய தினேஷ் கார்த்திக் தற்போது டெலிவிஷன் வர்ணனை செய்யும் பணியில் ஈடுபட உள்ளார்.
இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் கவாஸ்கருடன் இணைந்து அவர் வர்ணனை செய்கிறார்.