ரிஷப் பண்ட், வாஷிங்டன் சுந்தர் ஆட்டத்தையே மாற்றினார்கள் – கோலி பாராட்டு

அகமதாபாத் டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. அத்துடன் தொடரை 3-1 எனக் கைப்பற்றியது. தொடரை கைப்பற்றிய பின் இந்திய அணி கேப்டன் விராட் கோலி கூறுகையில், ‘‘சென்னையில் நடந்த முதலாவது டெஸ்ட் தோல்வியில் இருந்து மீண்டு வந்து தொடரை வென்ற விதம் மிகவும் திருப்தி அளிக்கிறது. முதலாவது டெஸ்ட் தோல்வியில் டாஸ் முக்கிய பங்கு வகித்தது.

அதன்பிறகு பந்து வீச்சிலும், பீல்டிங்கிலும் மிகவும் தீவிரத்துடன் செயல்பட்டு எழுச்சி பெற்றிருக்கிறோம். கடைசி டெஸ்டில் ரிஷப் பண்ட்- வாஷிங்டன் சுந்தரின் பார்ட்னர்ஷிப் ஆட்டத்தின் போக்கை மாற்றியது. அக்‌சர் பட்டேலும் நன்றாக ஆடினார். தொடரை வெல்வது மகிழ்ச்சிதான். ஆனால் எப்போதும் முன்னேற்றம் காண சில விஷயங்கள் இருக்கிறது.

அஷ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் கடந்த 6-7 ஆண்டுகளாக எங்களது நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கி வருகிறார். அவரைத்தான் அதிகம் நம்பி இருக்கிறோம். முதலாவது டெஸ்டில் தோற்ற பிறகு ரோகித் சர்மா 2-வது டெஸ்டில் அடித்த சதம் சரிவில் இருந்து மீள உதவியது. அத்தகைய ஆடுகளத்தில் 150 ரன்கள் என்பது, பேட்டிங் ஆடுகளத்தில் 250 ரன்கள் எடுப்பதற்கு சமமானது. தொடர் முழுவதும் அவரது இன்னிங்ஸ் முக்கியமானதாக அமைந்தது.

இப்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு சென்று விட்டதை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் ஒரு கட்டத்தில் இதுவே எங்களுக்கு கவனச்சிதறலாக இருந்தது. இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடுவதை எதிர்நோக்கியுள்ளோம்’’ என்றார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools