ரிஷப் பண்ட் வந்தால் போதும் – ரிக்கி பாண்டிங் உருக்கம்
கார் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரிஷப் பண்ட், முதற்கட்ட சிகிச்சைகளை வெற்றிகரமாக முடித்துள்ளார். சமீபத்தில் தான் டேராடூனில் இருந்து மும்பையில் உள்ள மேக்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இன்னும் 4 வாரங்களில் மேலும் ஒரு அறுவை சிகிச்சை இருப்பதாக தெரிகிறது.
தசை நார் கிழிந்துள்ளதால் ரிஷப் பண்ட் பழைய உடற்தகுதிகளை பெற்று குணமடைந்து வருவதற்கு குறைந்தது ஒரு வருடம் ஆகிவிடலாம் எனக்கூறப்படுகிறது. இதனால் இந்தாண்டு நடக்கவுள்ள ஐபிஎல், டெஸ்ட் சாம்பியன்ஷிப், ஆசிய கோப்பை, உலகக்கோப்பை போன்ற முக்கிய கிரிக்கெட் தொடர்களில் ரிஷப் பண்ட் இடம்பெற போவதில்லை.
இந்நிலையில் பண்ட் ஐபிஎல் தொடருக்கு வரும்படி டெல்லி கேப்பிடல்ஸ் அணி பயிற்சியாளர் ரிக்கிப் பாண்டிங் அழைத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
ரிஷப் பண்ட் விளையாடுவதற்கு உடற்தகுதியுடன் இல்லை என்றாலும், அவர் எங்கள் அணிக்கு தேவை. ஒரு கேப்டனாக அவரின் செயல்பாடுகள், சிரிப்புகள், அணியை மகிழ்ச்சியாய் வைத்துக்கொள்வது போன்றவை கண்டிப்பாக டெல்லி அணிக்கு தேவை.
எனவே ரிஷப் பண்ட் பயணம் மேற்கொள்ளும் அளவிற்கு தயாராகிவிட்டால் போதும், ஐபிஎல் போட்டிகளின் போது டக் அவுட்டில் எனக்கு அருகில் அமர்ந்திருக்க வேண்டும். மார்ச் மாதத்தின் மத்தியில் டெல்லி கேப்பிடல்ஸ் முகாம் தொடங்கப்படும். அப்போது இருந்து அனைத்து நாட்களிலும் ரிஷப் பண்ட், என்னுடன் பயணம் செய்ய விரும்புகிறேன். அவர் இருந்தாலே போதும்.
இவ்வாறு ரிக்கிப் பாண்டிங் கூறியுள்ளார்.
ரிஷப் பண்ட் விளையாட மாட்டார் என்பதால் டெல்லி அணியின் அடுத்த கேப்டனாக டேவிட் வார்னர் நியமிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. கேப்டன்சியில் அதிக அனுபவம் கொண்ட வார்னர், ஐபிஎல் தொடரிலும் 2016ம் ஆண்டு சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு கோப்பையை வென்றுக்கொடுத்தார். பாண்டிங்கும் வார்னர் மீது அதிக நம்பிக்கை வைத்திருப்பதால் அதிக வாய்ப்புள்ளது.