Tamilவிளையாட்டு

ரிஷப் பண்ட் குறித்து உருக்கமான பதிவை வெளியிட்ட ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர்

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் கடந்த 30-ந் தேதி டெல்லியில் இருந்து தனது சொந்த ஊரான உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ரூர்க்கீ நகருக்கு காரில் சென்றார். அப்போது கார் தேசிய நெடுஞ்சாலையில் தடுப்பு கம்பியில் மோதி தீப்பிடித்து எரிந்தது. இதில் ரிஷப் பண்ட் படுகாயத்துடன் உயிர் தப்பினார். முதல் கட்ட சிகிச்சைக்கு பிறகு அவர் டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்றார். நெற்றியில் ஏற்பட்ட காயத்துக்கு உடனடியாக பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டது. கால் முட்டு மற்றும் கணுக்காலில் ரிஷப் பண்டுக்கு பலத்த காயம் ஏற்பட்டு தசை நார் கிழிந்து இருக்கிறது.

குறிப்பாக முழங்காலில் ஏற்பட்டு இருக்கும் காயத்துக்கு உடனடியாக ஆபரேஷன் செய்ய வேண்டி உள்ளது. எனவே பாதிப்பின் தன்மையை அறிந்து அதற்கு தகுந்த உயர்தர சிகிச்சை அளித்து அவர் விரைவில் குணமடைய இந்திய கிரிக்கெட் வாரியம் துரித நடவடிக்கை எடுத்தது. இதனால் ரிஷப் பண்ட் மேல் சிகிச்சைக்காக டேராடூனில் இருந்து மருத்துவ வசதியுடன் கூடிய ஏர் ஆம்புலன்ஸ் விமானம் மூலம் மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார். அங்குள்ள விளையாட்டு மருத்துவ பிரிவின் தலைவரும், எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர் தின்ஷா பர்திவாலா நேரடி மேற்பார்வையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தேவைப்பட்டால் அவரை வெளிநாட்டுக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஆபரேஷனுக்கு பிறகே 25 வயதான ரிஷப் பண்ட் களம் திரும்புவதற்கு எத்தனை மாதங்கள் ஆகும் என்பது உறுதியாக தெரிய வரும். இப்போதைக்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் மற்றும் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அவர் விளையாட வாய்ப்பில்லை என தெரிகிறது. இந்நிலையில் ஐபிஎல்லில் டெல்லி அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் ரிஷப் பண்ட் சீக்கிரம் குணமடைய வேண்டும் என ஐபிஎல்லில் டெல்லி அணிக்காக தொடக்க ஆட்டக்காரராக விளையாடி வரும் டேவிட் வார்னர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் , நலமுடன் வாருங்கள் சகோதரர் ரிஷப் பண்ட். நாங்கள் அனைவரும் உங்கள் பின்னால் என அவருடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.