ரிஷப் பண்ட் உடல் எடை அதிகமாக இருப்பதால் கீப்பிங் செய்வதில் சிரமப்படுகிறார் – பாகிஸ்தான் முன்னாள் வீரர் கருத்து
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடருக்கு 24 வயதான ரிஷப்பண்ட் கேப்டனாக பொறுப்பு வகித்தார். இந்த தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது. முதல் 2 போட்டியிலும் தோற்றதால் இந்திய அணி தொடரை இழந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனால் 3-வது மற்றும் 4-வது போட்டியில் தொடர்ந்து இழப்பில் இருந்து தப்பியது. தொடரை இழக்காமல் ரிஷப்பண்ட் விமர்சனத்தில் இருந்து தப்பினார். அதே நேரத்தில் அவரது பேட்டிங் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர் 5 ஆட்டத்தில் 58 ரன்களை எடுத்தார். அவரது சராசரி 14.50 ஆகும்.
இந்த மோசமான பேட்டிங்கால் 20 ஓவர் உலக கோப்பைக்கான இந்திய அணியில் ரிஷப்பண்டின் இடம் குறிந்து முன்னாள் வீரர்கள் சிலர் கேள்வி எழுப்பி உள்ளனர். இந்த நிலையில் ரிஷப் பண்ட் அதிக உடல் எடையுடன் இருப்பதால் விக்கெட் கீப்பிங் செய்வது பிரச்சினையாக இருக்கிறது என்று பாகிஸ்தான் முன்னாள்வீரர் டேனிஷ் கனேரியா தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
ரிஷப்பண்டின் கீப்பிங் குறித்து பேச உள்ளேன். வேகப்பந்து வீரர்கள் பந்து வீசும் போது அவர் குனியாமல் நின்றுகொண்டே இருக்கிறார். அவர் அதிக எடையுடன் இருப்பதால் விரைவாக செயல்பட முடியவில்லை. அவரது உடல்நலத்தில் இன்னும் கவனம் செலுத்த வேண்டும். முதலில் அவர் உடல் தகுதியுடன் இருக்கிறாரா? ரிஷப்பண்ட் தனது பேட்டிங் ஸ்டைலையும் மாற்றிக்கொள்ள வேண்டும். அவருக்கு பதிலாக கே.எஸ். பரத் அல்லது விர்த்திமான் சஹாவுக்கு வாய்ப்பு கொடுக்கலாம். ரிஷப்பண்டுக்கு ஓய்வு கொடுக்கலாம். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.