இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 205 ரன்களில் சுருண்டது. அந்த அணியில் அதிகமாக பென் ஸ்டோக்ஸ் 55 ரன்கள் குவித்தார். இந்தியா சார்பில் தரப்பில் அக்சர் பட்டேல் 4 விக்கெட்டும், அஸ்வின் 3 விக்கெட்டும் எடுத்தனர்.
இதைத்தொடர்ந்து, முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 24 ரன்கள் சேர்த்திருந்தது.
இரண்டாம் நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. கேப்டன் கோலி ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். ரோகித் சர்மா 49 ரன்கள், புஜாரா 17 ரன்கள், ரகானே 27 ரன்களில் ஆட்டமிழந்தனர்.
பொறுப்புடன் ஆடிய ரிஷப் பண்ட் – வாஷிங்டன் சுந்தர் ஜோடி இங்கிலாந்து பந்துவீச்சை திறம்பட எதிர்கொண்டு ரன்களை குவித்தது. ரிஷப் பண்ட் சதமடித்து 101 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இந்நிலையில், ரிஷப் பண்ட் அனைத்து நிலைகளிலான போட்டிகளிலும் சிறப்புடன் விளையாடுவார் என சவுரவ் கங்குலி பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கங்குலி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், எவ்வளவு சிறந்தவர் அவர்? நம்பமுடியவில்லை… நெருக்கடியான நிலையில் சிறப்புடன் ஆடினார். இது முதல் முறையல்ல. கடைசி முறையாகவும் இருக்காது… வரும் ஆண்டுகளில் அனைத்து நிலைகளிலான ஆட்டங்களிலும் எல்லா தருணங்களிலும் சிறந்தவராக அவர் இருந்திடுவார்.
இந்த ஆக்ரோஷ முறையில் தொடர்ந்து விளையாடுங்கள். அதனாலேயே அவர் போட்டியை வெற்றி பெற செய்பவராகவும் மற்றும் சிறந்தவராகவும் இருக்கிறார் என பதிவிட்டுள்ளார்.