Tamilவிளையாட்டு

ரிஷப் பண்டை கேப்டனாக நியமிக்க வேண்டும் – கவாஸ்கர் கருத்து

இந்திய கிரிக்கெட்டின் 3 வடிவிலான போட்டிகளுக்கும் (டெஸ்ட், ஒருநாள் ஆட்டம், 20 ஓவர்) கேப்டனாக ஜொலித்தவர் விராட்கோலி. தற்போது அவர் எந்த கேப்டன் பதவியிலும் இல்லை.

டி20 உலக கோப்பை போட்டிக்கு முன்பு 20 ஓவர் கேப்டன் பதவியில் இருந்து விராட்கோலி விலகினார். அதைத் தொடர்ந்து ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பொறுப்பில் இருந்து அவர் நீக்கப்பட்டார்.

இந்த விவகாரம் தொடர்பாக விராட் கோலிக்கும், கிரிக்கெட் வாரியத்துக்கும் இடையே உச்சக்கட்ட கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ஒயிட்பால் போட்டிகளுக்கு (ஒருநாள் போட்டி, 20 ஓவர்) போட்டிகளுக்கு ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டார். விராட்கோலி டெஸ்ட் போட்டிக்கு மட்டும் கேப்டனாக நீட்டிக்கப்பட்டார்.

இந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் விராட்கோலி டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகினார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்த பிறகு அவர் இந்த முடிவை எடுத்தார். அவரது 7 ஆண்டு கால கேப்டன் சகாப்தம் முடிந்தது.

விராட்கோலி டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகியதால் இந்திய டெஸ்ட் அணிக்கு புதிய கேப்டனாக யார்? நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

ஒயிட்பால் போட்டிகளுக்கு கேப்டனாக இருக்கும் ரோகித்சர்மா, லோகேஷ் ராகுல், ரி‌ஷப்பண்ட் ஆகிய மூவரில் ஒருவர் டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்படலாம் என்று கணிப்புகள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் இந்திய டெஸ்ட் அணிக்கு ரி‌ஷப் பண்டை கேப்டனாக நியமிக்கலாம் என்று முன்னாள் கேப்டனும், டெலிவி‌ஷன் வர்ணனையாளருமான கவாஸ்கர் விருப்பம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

விராட்கோலிக்கு பிறகு டெஸ்ட் அணிக்கு ரி‌ஷப் பண்டை தான் கேப்டனாக நியமிக்க வேண்டும். அணியை வெற்றிகரமாக முன்னோக்கி அழைத்து செல்வதற்கான திறமை அவரிடம் இருக்கிறது. தேர்வு குழுவை பொறுத்தவரை கேப்டன் பதவி ஒரு விவாதமாக இருக்கும்.

3 வடிவிலான போட்டிகளுக்கும் தானாக தேர்வு செய்யப்படுபவர் கேப்டனாக இருக்க வேண்டும். ரி‌ஷப்பண்ட் அனைத்து வடிவிலான போட்டிகளுக்கான அணியிலும் உள்ளார். என்னை பொறுத்தவரை அடுத்த டெஸ்ட் கேப்டனுக்கு அவர் தகுதியானவர்.

கேப்டவுன் டெஸ்டில் அவர் பொறுப்புடன் விளையாடி சதம் அடித்துள்ளார். இதனால் அவருக்கு கேப்டனுக்குரிய திறமை இருக்கிறது.

மன்சூர்அலிகான் பட்டோடி இளம்வயதில் தான் கேப்டனாக நியமிக்கப்பட்டார். கேப்டன் பதவியை ஏற்ற பிறகு வெற்றியை பெற்றார்.

ரோகித் சர்மாவுக்கு ஐ.பி.எல். போட்டியில் மும்பைக்கு கேப்டனான பிறகு பேட்டிங்கில் மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டது. இதே நிலைதான் ரி‌ஷப்பண்டுக்கு இருக்கிறது. அவர் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக இருக்கிறார்.

ரி‌ஷப்பண்ட் இந்திய அணியை முன்னோக்கி எடுத்து செல்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இவ்வாறு கவாஸ்கர் கூறி உள்ளார்.