Tamilசெய்திகள்

ரிப்பன் கட்டிடத்தில் ஒளிரும் வண்ண விளக்குகள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் பாரம்பரியம் மிக்க சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை கட்டிடம் ரூ.1.81 கோடி செலவில் ஒளிரும் வண்ண விளக்குகளால் ஜொலிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இதனை மக்களின் பார்வைக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிட வளாகத்தில் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். அப்போது முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

நான் பள்ளிக்கூடத்தில் மாணவனாக படித்துக் கொண்டிருந்தபோது பள்ளியில் இருந்து கல்வி சுற்றுலா அழைத்துச் செல்வார்கள். சென்னையில் அடையாறு ஆலமரம், மியூசியம், உயிரியல் பூங்கா, காந்தி மண்டபம், ரிப்பன் கட்டிடம், விக்டோரியா மகால் போன்ற கட்டிடங்களைப் பார்க்க முடியும். அப்போது வேடிக்கை பார்த்தேன். வேடிக்கை பார்த்த எனக்கு இன்று இந்தக் கட்டிடத்தில் விளக்கு எரியவைக்கக் கூடிய வாய்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. இதற்கு பெருமைப்படுகிறேன்.

1996-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சி பொறுப்புக்கு வந்தபோது கலைஞரிடத்தில் கட்சி முன்னோடிகள் அத்தனை பேரும் அமைச்சரவையில் மு.க.ஸ்டாலினுக்கு இடம் கொடுக்கவேண்டும் என போராடினார்கள். ஆனால் தலைவர் வாய்ப்பு வழங்கவில்லை.

ஆட்சி அமைந்து, அமைச்சரவை அமைக்கப்பட்ட பிறகு, நீண்ட ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த மாநகராட்சி தேர்தலை நடத்தினோம். அப்படி நடத்திய போது, அதுவும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படக்கூடிய முதல் மேயராக நான் வர வேண்டும் என்று மேயர் வேட்பாளராக என்னை அறிவித்தார். அப்போது வெற்றியும் பெற்றோம்.

வெற்றி பெற்ற பிறகு, மாநகராட்சியில் பதவி ஏற்பதற்கான நாள் குறிக்கப்பட்டு, மன்றத்தில் பதவி ஏற்கக்கூடிய விழா ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்கான அழைப்பிதழை தலைவர் கலைஞரிடம் கொடுத்தோம். அழைப்பிதழின் பின்புறம் ரிப்பன் கட்டிடம் இடம்பெற்றிருந்தது. அதனை கலைஞர் ஒரு முறைக்கு இரு முறை பார்த்தார்.

அப்போது அருகில் இருந்த மூத்த முன்னோடிகள், அமைச்சர்களிடம் எல்லோரும் ஸ்டாலினை அமைச்சராக்கி ஒரு அறையில் கொண்டு போய் உட்கார வைக்க பார்த்தீர்கள். ஆனால் இப்போது மேயராக்கி இவ்வளவு பெரிய கட்டிடத்தில் உட்கார வைத்திருக்கிறேன் என பெருமையாகச் சொன்னார். அதுதான் இப்போது என் நினைவுக்கு வருகிறது. அடிக்கடி இந்த வழியாகச் செல்லும்போது அதைத்தான் நினைத்துக் கொண்டிருப்பேன் என தெரிவித்தார்.