Tamilசெய்திகள்

ராவணன் கொடும்பாவி எரிப்பு நிகழ்வில் நடந்த விபரீதம்! – பீதியில் ஓடிய மக்கள்

தீமைகளை வென்று தர்மத்தை நிலைநாட்டும் வகையில் இராமாயண காவியத்தில் வரும் பத்து தலை கொண்ட இலங்கை மன்னன் ராவணனை அயோத்தி மன்னர் ராமர் கொன்றொழித்த திருநாளை விஜயதசமி என்ற பெயரில் வடமாநிலத்தவர்கள் கொண்டாடி வருகின்றனர். தசரா என்றும் அழைக்கப்படும் இத்திருநாளன்று ஊரில் உள்ள திடல்களில் வைக்கோல் மற்றும் காகித அட்டைகளால் தயாரிக்கப்பட்ட மிகப்பெரிய அளவிலான ராவணன் கொடும்பாவியை தீயிட்டு எரித்து, அந்த கொடும்பாவி எரியும் காட்சியை கண்டு மக்கள் பரவசம் கொள்வது வழக்கம். அவ்வகையில், நாடு முழுவதும் தற்போது தசரா கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், உத்தரபிரதேசம் மாநிலம், முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள அரசு கல்லூரி திடலில் நேற்று (புதன்கிழமை) இரவு ராவணனின் கொடும்பாவியை உள்ளூர் மக்கள் தீயிட்டு எரித்து அக்காட்சியை கண்டு களித்தனர். அப்போது, ராவணனின் கொடும்பாவியை வெடித்து சிதறடிப்பதற்காக உள்ளே பொருத்தப்பட்டிருந்த பட்டாசுகள் ஏவுகணகளாக, மாறி வேடிக்கை பார்த்து கொண்டிருந்த பொதுமக்களை நோக்கி வரிசையாக பாய்ந்து வந்தது.
இதைகண்டு பீதியடைந்த மக்கள், பட்டாசு ஏவுகணைகளில் இருந்து தப்பிப்பதற்காக உயிர் பயத்துடன் ஓட்டம்பிடித்தனர். இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அங்கு பாதுகாப்புக்காக நின்றிருந்த போலீசாரும் செய்வதறியாமல் திகைத்தவாறு தலைதெறிக்க ஓடிய காட்சிகளை ஒருவர் தனது கைபேசியில் வீடியோவாக பதிவுசெய்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த காட்சி பல்வேறு ஊடகங்களின் வாயிலாக சமூகவலைத்தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.

இந்த பதற்றமான களேபரம் ஓய்வதற்குள் அந்த திடலுக்குள் முரட்டுத்தனமாக பாய்ந்துவந்த ஒரு காளை நிலவரத்தை மேலும் கலவரமாக்கி, பார்வையாளர்களை மேலும் பீதிக்குள்ளாக்கியது குறிப்பிடத்தக்கது. இதேபோல், அரியானா மாநிலத்தின் யமுனாநகரில் நேற்று நடைபெற்ற தசரா விழாவில் மிகப்பெரிய அளவில் கொளுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்த ராவணனின் கொடும்பாவி பொதுமக்கள் இருந்த பகுதியை நோக்கி சரிந்து விழுந்தது. நல்லவேளையாக, பார்வையாளர்களுக்கு எந்தவிதமான அசம்பாவிதமும் நேரவில்லை என்று யமுனாநகர் போலீசார் தெரிவித்தனர்.

கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் நடைபெற்ற தசரா திருவிழாவின்போது பஞ்சாப் மாநிலத்தின் தலைநகரான அம்ரிட்சர் அருகாமையில் உள்ள ஜோடா பதக் என்ற இடத்தில் ரெயில் தண்டவாளங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் ராவணன் கொடும்பாவி எரிக்கப்பட்டது. அங்கு வேடிக்கை பார்க்க கூடியிருந்த மக்கள் உற்சாகம் மிகுதியால் தண்டவாளத்தின் குறுக்கே நின்றிருந்தபோது இருபுறங்களில் இருந்தும் வேகமாக வந்த இரு ரெயில்கள் மக்கள் கூட்டத்துக்கிடையில் மோதிய கோர விபத்தில் சுமார் 60 பேர் உடல் சிதறி, பரிதாபமாக உயிரிழந்தது நினைவிருக்கலாம்.