தமிழ் திரையுலகின் முன்னணி காமெடி நடிகரான சூரி தற்போது இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில் “விடுதலை” படத்தில் நடித்து வருகிறார். கார்த்தி நடிப்பில் சமீபத்தில் வெளியான “விருமன்” படத்தில் சூரியின் காமெடி ரசிகர்களை ரசிக்கும்படி வைத்துள்ளது.
இதையடுத்து ‘விருமன்’ திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா மதுரையில் கடந்த 3-ந்தேதி நடந்தது. அதில் கலந்து கொண்ட நடிகர் சூரி, “ஆயிரம் கோவிலை கட்டு வதைவிட ஒரு மாணவனுக்கு கல்வி வழங்குவது சிறந்தது” என்று பேசினார். நடிகர் சூரியின் இந்த பேச்சுக்கு சில அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன.
அதன்பின்னர் தனது பேச்சு குறித்து நடிகர் சூரி விளக்கம் அளித்தார். அதில், “நான் கடவுளுக்கு எதிரானவன் கிடையாது. நான் எந்த வேலையை தொடங்கினாலும் மதுரை மீனாட்சி அம்மனை வைத்துதான் தொடங்குவேன். நான் நடத்தும் ஓட்டலுக்கு அம்மன் என்றுதான் பெயர் வைத்துள்ளேன்.
நான் கூறியதை சிலர் தவறாக எடுத்துள்ளனர். என்னுடைய பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. நான் படிக்காதவன் என்பதால் கல்வியின் முக்கியத்துவம் எனக்கு தெரியும். அதனால் மற்றவர்கள் படிக்க வேண்டும் என்றுதான் அதை கூறினேன். நான் கோவிலுக்கு எதிரானவன் கிடையாது” என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் நடிகர் சூரி ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாத சுவாமி கோவிலுக்கு போலீஸ் பாதுகாப்புடன் சாமி தரிசனம் செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகின்றது. சூரியின் கருத்துக்கள் சர்ச்சையானதால் போலீஸ் பாதுகாப்புடன் சாமி தரிசனம் செய்ய வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.