பஞ்சாப் அரசின், பியாந்த் சிங் தலைமையிலான அமைச்சரவையில், மாநில மந்திரியாக பதவி வகித்தவர் மனீந்தர் ஜீத் பிட்டா. தற்போது அவர் அகில இந்திய பயங்கரவாத எதிர்ப்பு முன்னணி தலைவராக உள்ளார். அவர் நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலுக்கு வருகை தந்தார். அவருக்கு, இந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனர் இளையராஜா தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
சாமி தரிசனம் செய்த மனீந்தர் ஜீத் பிட்டாவுக்கு, கோவில் நிர்வாகம் சார்பில், சால்வை அணிவித்து பிரசாதம் வழங்கப்பட்டது. மேலும் நினைவு பரிசாக ஆஞ்சநேயர் படம் வழங்கப்பட்டது. பின்னர் மனீந்தர் ஜீத் பிட்டா நிருபர்களிடம் கூறியதாவது:-
நான், ஸ்ரீ ஆஞ்சநேயரை தரிசனம் செய்வதற்காக நாமக்கல் வந்துள்ளேன். மதுரையில் மீனாட்சி அம்மனை தரிசனம் செய்துவிட்டு, ராமேஸ்வரம் செல்கிறேன். சில அரசியல் கட்சிகள், ராமர் கட்டிய பாலம் இல்லை என சொல்கின்றனர். அது கற்பனை. அவ்வாறு இருந்திருந்தால், அந்த பாலம் உடைந்து விட்டது என கூறுகின்றனர்.
ராமர் கட்டிய பாலம் தமிழகத்தில் இருக்கிறது என்பதை நான் நிரூபிப்பேன். இந்த உடலில் உயிர் இருக்கின்ற வரையில், நான் அதை நிரூபித்துவிட்டுத்தான் செல்வேன். இலங்கைக்கு செல்ல சேது பாலம் கட்டும்போது, ராமருக்கு ஆஞ்சநேயர் எப்படி உறுதுணையாக இருந்தாரோ, அதேபோல், பிரதமர் மோடிக்கும், ஆர்.எஸ்.எஸ்., அமைப்புக்கும் நான் என்றும் உறுதுணையாக இருப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.