Tamilசெய்திகள்

ராமேசுவரம், மதுரை, திருவண்ணாமலை கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம் – அமைச்சர் சேகர் பாபு

சென்னை, நுங்கம்பாக்கம், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் இன்று அமைச்சர்பி.கே.சேகர்பாபு தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இது தொடர்பாக அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:-

கடந்த ஆண்டு சட்டமன்ற அறிவிப்பில் 112 அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டு அதில் 90 சதவீத பணிகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. மீதமுள்ள பணிகள் நடைபெற்று வருகின்றன.

அதேபோல் இந்தாண்டு மானியக் கோரிக்கையில் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் 165 அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த அறிவிப்புகள் ஒவ்வொன்றாக செயல்படுத்தப்படுத்தப்பட்டு பக்தர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

இக்கூட்டத்தில் ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவில், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் ஆகிய 3 கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானத் திட்டம் தொடங்குவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

கோவில் யானைகளுக்கு புதிய குளியல் தொட்டி அமைப்பது தொடர்பாகவும், மாதந்தோறும் பௌர்ணமி தினங்களில் 12 பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களில் 108 திருவிளக்குப் பூஜைகள் நடத்துவது தொடர்பாகவும், ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் இருந்து காசி விஸ்வநாத சுவாமி கோவிலுக்கு ஆன்மிகப் பயணம் அழைத்துச் செல்வது தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச்செயலர் டாக்டர் பி. சந்திரமோகன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர்ஜெ.குமரகுருபரன், கூடுதல் ஆணையர்கள் ரா.கண்ணன், ந.திருமகள், சி.ஹரிப்ரியா மற்றும் அனைத்து மண்டல அலுவலர்கள் கலந்து கொண்டனர்.