தென்னகத்து காசி என்ற ழைக்கப்படும் ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலில் அமாவாசை நாட்களில் நாடு முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள்.
அன்றைய நாளில் அக்னி தீர்த்த கடலில் நீராடி தர்ப்பணம் கொடுப்பது இந்துக்களின் கடமையாக கருதப்படுகிறது.இதிலும் குறிப்பாக ஆடி, புரட்டாசி, தை ஆகிய மாதங்களில் வரக்கூடிய அமாவாசை சிறப்பானதாக கருதப்படுகிறது. அன்றைய நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள்.
கடந்த 2020-ம் ஆண்டு முதல் 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் அதிகமாக இருந்ததால் அரசு உத்தரவுப்படி கோவில்களில் அமாவாசை, பவுர்ணமி மற்றும் விசேஷ நாட்களில் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டது.
ராமேசுவரத்திலும் இந்த தடை காரணமாக பக்தர்கள் மேற்கண்ட நாட்களில் சாமி தரிசனம் செய்ய முடியவில்லை. இந்த நிலையில் தற்போது கொரோனா விதிகள் 90 சதவீதம் தளர்த்தப்பட்டுள்ளதால் கோவில்களில் தரிசனம் செய்யவும், புனித தீர்த்தங்களில் நீராடவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி தை அமாவாசையை முன்னிட்டு நேற்று முதல் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் ரெயில், பஸ், வேன், கார்களில் ராமேசுவரத்துக்கு வந்த வண்ணம் இருந்தனர்.
தை அமாவாசையான இன்று அதிகாலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம், பூஜைகள் செய்தனர். தொடர்ந்து ராம நாதசுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து அங்குள்ள 22 புனித தீர்த்தங்களிலும் நீராடிய பின்பு சுவாமி-அம்பாளை தரிசித்தனர்.
2 ஆண்டுகளுக்கு பிறகு அனுமதி அளிக்கப்பட்டதால் ராமேசுவரத்தில் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. நகர் பகுதி முழுவதும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையொட்டி ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.