ராமர் தான் பாரத தேசத்தின் ஆதாரம் – பிரதமர் மோடி பேச்சு
உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தி நகரம் இன்று காலை ராமர் சிலை பிரதிஷ்டைக்காக கோலாகலமாக மாறியது. அயோத்தி முழுவதும் மக்கள் வெள்ளமாக காணப்பட்டது. திரும்பிய திசையெல்லாம் ஜெய்ஸ்ரீராம் என்ற கோஷம் ஒலித்துக் கொண்டே இருந்தது. மக்கள் ஆடல்-பாடலுடன் தீபாவளி போல இன்றைய விழாவை கொண்டாடினார்கள். இதைதொடர்ந்து, மிக சரியாக மதியம் 12 மணி 29 நிமிடங்கள் 08 வினாடிகளுக்கு ஸ்ரீ பாலராமர் பிரதிஷ்டை செய்யப்பட்டார். ராமர் சிலை கண்களில் கட்டப்பட்டிருந்த துணி அகற்றப்பட்டது. பிரதமர் மோடி, ராமர் சிலையை வழிபட்டார். பின்னர், ராமர் கோவிலுக்கு வருகை தந்திருந்த சுமார் 8 ஆயிரம் பேர் முன்னிலையில் பிரதமர் மோடி உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியிருப்பதாவது:-
பல ஆண்டு காத்திருப்புக்கு பிறகு இன்று ராமர் வந்துவிட்டார். இந்த நன்னாளில் நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள். ராமர் இனி கூடாரத்தில் வசிக்க வேண்டிய நிலை இருக்காது. தேசத்தின் ஒவ்வொரு பகுதியிலும் ராம நாமம் ஒலிக்கிறது. பகவான் ராமரின் ஆசிர்வாதம் நம் அனைவருக்கும் உள்ளது. இன்றைய நாள் வரலாற்று சிறப்புமிக்க தருணம் மட்டுமல்ல, புதிய காலச்சக்கரத்தின் துவக்கம். ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகும் மக்கள் இந்த நாளை நினைத்து பார்ப்பார்கள். அனுமன், லட்சுமணன், பரதன் உள்ளிட்ட அனைவரையும் வணங்குகிறேன். தெய்வீக அனுபவத்தை நான் உணர்கிறேன்.
குறைகள் இருப்பின், ராமர் நம்மை மன்னிப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. நாட்டில் நியாயத்தை வழங்குவதற்கு நியாய ராஜ்ஜியம் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மக்கள் இந்த நாளை தீபாவளியாக கொண்டாடுகின்றனர். ராமரின் ஆசிர்வாதத்தால் ராமர் பாலம் தொடங்கும் அரிச்சல்முனையில் நேற்று வழிபட்டேன். 11 நாள் விரதத்தின்போது ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் உள்ளிட்ட கோவில்களில் வழிபட்டேன். பகவான் ராமர் நாட்டு மக்களின் மனங்களில் உள்ளார். கடந்த 11 நாட்களில் பல்வேறு மாநிலங்களில், பல மொழிகளில் ராமாயணத்தை கேட்டேன். கடவுள் ராமர் தேசத்தை இணைக்கிறார்.
ராமர் நம்முடையவர் மட்டுமல்ல, அனைவருக்கும் ஆனவர். இந்த நிகழ்வை உலகம் முழுவதும் உள்ள ரமர் பக்தர்கள் கொண்டாடி வருகின்றனர். ராமர் தான் பாரத தேசத்தின் ஆதாரம். ராமர் நிரந்தரமானவர் மட்டுமல்ல நித்தியமானவர். பகவான் ராமர் நமக்கான வழிகளை காட்டுவார். இன்று இன்னும் ஆயிரம் ஆண்டுகள் அவரது ராஜ்ஜியம் நிலைநிறுத்தப்பட்டு உள்ளது.
வலிமையான நாட்டை உருவாக்க வேண்டுமென்ற உறுதியை நாம் ஏற்க வேண்டும். ராமர், அனுமனை வெளியே தேடாமல், நம் உள்ளத்தில் வைக்க வேண்டும். ராமர் கோவிலை நிர்மானிக்க வேண்டுமென்ற எண்ணம் நம் அனைவரின் மனதிலும் இருந்தது. இன்றைய இந்தியாவின் கனவுகள் நிறைவேறாது என்ற பேச்சுக்கே இடமில்லை. பகவான் ராமர் பிரச்சினைக்குரியவர் அல்ல, அவர் பிரச்சினைகளுக்கான தீர்வாக உள்ளவர்.
ராமருக்கான நமது பூஜைகள் விசேஷமானதாக இருக்க வேண்டும். இந்த காலக்கட்டம் நாட்டின் வளர்ச்சிக்கான அமிர்த காலம். அடுத்த ஆயிரம் ஆண்டுக்கான அடித்தளத்தை நாம் தற்போது அமைக்க வேண்டும். வளர்ச்சி அடைந்த நாட்டை உருவாக்க அடித்தளமாக ராமர் கோவில் இருக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.