ராமர் கோவில் விவகாரம்! – அமைதி காக்குமாறு ராஜ்நாத் சிங் வேண்டுகோள்

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது எப்போது என்று பாரதீய ஜனதா எம்.பி.க்கள் கூட்டத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. பொறுமை காக்குமாறு ராஜ்நாத் சிங் கேட்டுக்கொண்டார்.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தமானது என்ற கேள்விக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை. இது தொடர்பான வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. அடுத்த ஆண்டுதான் இது விசாரணைக்கு வருகிறது.

ஆனால் அயோத்தியில் மிகப்பெரிய அளவில் ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட இந்துத்துவா அமைப்புகள் கடந்த சில மாதங்களாக வலியுறுத்தி வருகின்றன. ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் உள்ளிட்ட தலைவர்கள் சட்டம் இயற்றி, ராமர் கோவில் கட்ட வேண்டும் என்று குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்துத்துவா அமைப்புகளின் உணர்வுகளில் பாரதீய ஜனதா கட்சிக்கு உடன்பாடு இருந்தாலும்கூட, சட்டம் இயற்றும் முடிவுக்கு அந்தக் கட்சி வரவில்லை.

இருப்பினும், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது, நாடாளுமன்ற தேர்தலில் கட்சியின் வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும் என்று பாரதீய ஜனதா கட்சிக்குள் கருத்து எழுந்துள்ளது.

இந்த நிலையில் டெல்லியில் நேற்று பாரதீய ஜனதா கட்சி எம்.பி.க்கள் கூட்டம் நடந்தது.

இந்தக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியும், கட்சியின் தலைவர் அமித் ஷாவும் கலந்து கொள்ளவில்லை.

இதில் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த எம்.பி.க்கள் ரவீந்திர குஷ்வாகா, ஹரி நாராயண் ராஜ்பார் ஆகியோர் அயோத்தி பிரச்சினையை எழுப்பி பேசினார்கள். அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது எப்போது என அவர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

அவர்களின் பேச்சுக்கு பிற எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்தனர்.

ஆனால் கட்சியின் மூத்த தலைவரும், மத்திய உள்துறை மந்திரியுமான ராஜ்நாத் சிங், “அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்பது எல்லோரின் விருப்பமும் ஆகும். அதே நேரத்தில் உறுப்பினர்கள் பொறுமை காக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து அவர் பேசும்போது, “பிரதமர் மோடியின் செல்வாக்குக்கு சமமாக எதிர்க்கட்சியில் ஒரு தலைவர் கிடையாது. அடுத்த ஆண்டு நடக்க உள்ள பொதுத்தேர்தலில் வெற்றி பெறுவதற்கு எம்.பி.க்கள் கடுமையாக உழைக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools