Tamilசெய்திகள்

ராமர் கோவில் விழா ஆன்மீக விழா என்னும் பெயரில் நடைபெறும் அரசியல் விழா – தொல்.திருமாவளவன் அறிக்கை

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

இந்திய நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி தனது கைகளால் தொட்டு பால ராமரின் கற்சிலைக்கு உயிரூட்டியதற்கு வட இந்திய சங்கராச்சாரிகளுள் ஒருவர் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார். “சூத்திரரான மோடி ராமர் சிலைக்கு எப்படி பிராண பிரதிஷ்டை செய்யமுடியும்? அது நாட்டுக்கே பெருங்கேடு விளையும்!”-என்றெல்லாம் ஆரூடம் கூறியிருக்கிறார். இது தானே சனாதனம். பிரதமரே ஆனாலும் சூத்திரனாகப் பிறந்த மோடி தனது குல தருமத்தை மீறுவது கூடாது. அதாவது, பிராமணரல்லாத எவருக்கும் கடவுளைப் பிரதிஷ்டை செய்யும் உரிமையோ அதிகாரமோ இல்லை என்பது தான் சனாதனம்.

மோடியின் இந்த மரபு மீறலை பெரும்பான்மையான சனாதன சக்திகள்-குறிப்பாக, பார்ப்பனர்கள் அனுமதிப்பதும், அமைதி காப்பதும் பிராமணரல்லாத பிற அப்பாவி இந்துக்களை ஏய்க்கும் ஒரு மோசடி அரசியல் உத்தியே ஆகும். உத்தரபிரதேசத்திலும் அதனைச் சுற்றியுள்ள அண்டை மாநிலங்களிலும் ஜனவரி 22 அன்று யாராவது இந்துக்கள் இறந்தால் பிணங்களை எரிக்கக் கூடாதென தடை விதிக்கப்பட்டிருக்கிறது. சனாதனம் இந்துக்களின் சுதந்திரத்தை எவ்வாறெல்லாம் பறிக்கிறது என்பதை இதன்மூலம் அறியலாம்.

அயோத்தியில் நடைபெறுவது கும்பாபிஷேகம் என்னும் குடமுழுக்கு நிகழ்வல்ல. ஏனெனில் இன்னும் கோவிலின் கட்டுமானப் பணிகள் முழுமையாக நிறைவடையவில்லை. அரைகுறை நிலையில் அவசரம் அவசரமாக இந்த விழா நடத்தப்படுகிறது.
இது ஆன்மீக விழா என்னும் பெயரில் நடைபெறும் அரசியல் விழா. இந்துக்களின் நம்பிக்கைக்கான பெருவிழா என்னும் பெயரில் நடத்தப்படும் சங்கபரிவார்களின் மதவெறி கொண்டாட்டத்தின் திருவிழா. எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்காக, அப்பாவி இந்துக்களின் மத உணர்வுகளையும் கடவுள் நம்பிக்கையையும் அரசியல் ஆதாயமாகச் சுரண்டும் சதிவிழா.

பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வர சங்பரிவார்கள் கையாளும் இந்த அரசியல் உத்தியை, இந்து மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். கல்வி மற்றும் வேலை வாய்ப்பு, பொருளாதாரம் போன்றவற்றில் ஏழை எளிய இந்துக்களை மேம்படுத்துவதற்கு கடந்த பத்தாண்டுகால ஆட்சியில் எதையும் செய்ய முனைப்புக் காட்டாத பா.ஜ.க. கும்பல், இந்துப் பெரும் பான்மைவாதம், இசுலாமிய-கிறித்தவ வெறுப்பு, ஜெய் ஸ்ரீராம் என மதத்தின் பெயரால், இந்திய மக்களை இந்துக்கள் என்றும் இந்து அல்லாதவர்கள் என்றும் பிளவு படுத்துகிற மக்கள்விரோத அரசியலையே ‘இந்துத்துவா’ என்னும் பெயரில் நடத்தி வருகின்றனர்.

ராமரின் பெயரால் நடக்கும் இந்து மக்களுக்கு எதிரான மாய்மால அரசியலின் உச்சம் தான் அயோத்தியில் அரங்கேறும் தேர்தல் பிரச்சார விழா. இதனை அனைத்துத் தரப்பு இந்து மக்கள் யாவரும் உணர்ந்து, சங்கபரிவார்களின் சதி அரசியலை முறியடிக்க அணிதிரள வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.