ராமர் கோவில் நிகழ்வு பிரதமர் மோடிக்கு அழியாப் புகழைத் தேடித் தரும் – இளையராஜா பேச்சு
தமிழ் திரையுலகில் மூத்த இசையமைப்பாளராக வலம் வரும் இளையராஜா தனது இசையின் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். இவரது பாடல்கள் இன்றளவும் ரசிகர்கள் வாழ்க்கையில் பிணைந்திருக்கும் அளவிற்கு கால் ஊன்றியிருக்கிறது. இவர் மூன்று தலைமுறையுடன் இணைந்து இசையமைத்துள்ளார்.
இதுவரை ஆயிரத்திற்கு மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்த இளையராஜா தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு என பல மொழி படங்களுக்கும் இசையமைத்துள்ளார். மேலும், இவர் மாநிலங்களவை எம்.பி.யும் ஆவார்.
இந்நிலையில், சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இளையராஜா, மோடிக்கு பகவான் அந்த எழுத்தை எழுதியுள்ளார் என்றார். அவர் பேசியதாவது, இன்றைய நாள் சரித்திரத்திலேயே முதல் முறையாக, சிறப்பான நாள். ராமர் கோவில் நிகழ்வு பிரதமர் மோடிக்கு அழியாப் புகழைத் தேடித் தரும்.
யாரால் முடியும்? எல்லோராலும் செய்ய முடியுமா? யாராலும் செய்ய முடியாது. அவருக்கு பகவான் அந்த எழுத்தை எழுதியுள்ளார். இந்தியாவில் எத்தனை பிரதமர்கள் வந்து போனார்கள்; யார் யார் என்னென்ன செய்தார்கள். எது சரித்திரத்திலேயே நிற்கிறது என கணக்கு பாருங்கள். யார் செய்தது அதிகமாக இருக்கிறது என்றும் கணக்குப் பாருங்கள். இதையெல்லாம் சொல்லும்போது என் கண்ணில் நீர் வருகிறது. இந்த நாளில் அயோத்தியில் இருக்க வேண்டிய நான்; இந்த இடத்தில் இருப்பது எனக்கு வருத்தத்தை தந்தாலும், உங்கள் முன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வது கொஞ்சம் ஆறுதலை அளிக்கிறது” என்றார்.
மேலும் “இந்தியாவில் எத்தனை கோவில்கள் உள்ளன; அந்தந்த கோவில்கள் எல்லாம் அந்த நேரத்தில் ஆண்ட மன்னர்கள் கட்டியதாக இருக்கும். இன்று இந்தியாவுக்கு என்று ஒரு கோவில் எழும்பி உள்ளது என்றால் அது ராமம் கோவில் தான். மன்னர்கள் கோவில்களைக் கட்டிய நிலையில், ராமர் பிறந்த இடத்திலேயே அவருக்காக கோவில் கட்டியுள்ளார் பிரதமர் மோடி. பிரதமரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். மன்னர்கள் செய்த வேலையை பிரதமர் செய்துள்ளார் என்றார்.