ராதாரவி நடிகைகளை விமர்சிப்பது தொடர்ந்தால், அவர் நடிக்க தடை விதிக்கப்படும் – நாசர் அறிக்கை
பட விழாவில் நயன்தாராவை விமர்சித்த ராதாரவிக்கு நடிகர் சங்கம் கண்டனம் தெரிவித்து உள்ளது. ராதாரவிக்கு நடிகர் சங்கம் சார்பில் அதன் தலைவர் நாசர் அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
“கொலையுதிர் காலம்” பட விழாவில் பெண்களை கொச்சைப்படுத்துவது போல் நீங்கள் பேசிய இரட்டை அர்த்த வசனங்களை கேட்டு மனது மிகவும் வருந்துகிறது. இதை தென்னிந்திய நடிகர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. இந்த மேடையில் மட்டும் அல்ல, பல காலங்களாக இதுபோல் இரட்டை அர்த்த வசனங்களையும், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுவதையும் வழக்கமாக கொண்டிருக்கிறீர்கள். இது ஊடகங்களின் மூலம் உலகெங்கும் பரவி இருக்கிறது.
இது ஒட்டுமொத்த திரைத்துறைக்கும், மற்ற நடிகர்களுக்கும், அதில் பங்காற்றக்கூடிய பெண்களுக்கும், ஒரு அவமானமான சூழ்நிலையையும், மனஉளைச்சலையும் ஏற்படுத்தித் தருகிறது என்பதை ஏன் தாங்கள் உணரவில்லை. திரைத்துறையில் தங்களது தந்தையாருக்குப் பிறகு தொடர்ச்சியாக ஐம்பது வருடங்கள் நீண்ட அனுபவத்தை கொண்டிருக்கக்கூடிய தாங்கள் தங்களுடைய அனுபவங்களை நல்வழியில் பயன்படுத்தினால் அது வருகின்ற தலைமுறைக்கு வழிகாட்டுதலாக இருக்கும்.
ஆனால் இதுபோன்ற கொச்சையான, கீழ்த்தரமான பேச்சுக்கள் உங்களுடைய மேன்மையை உயர்த்தாது அது மட்டுமல்லாமல், திரைத்துறையின் மேல் மக்களுக்கு இருக்கக்கூடிய நம்பிக்கையையும் சீரழிக்கும் என்பதை ஏன் உணரவில்லை. இனிவரும் காலங்களில் நீங்கள் இதை உணர்ந்து, இதுபோன்ற வக்கிரமான பேச்சைத் தவிர்த்து செயல்படுவீர்கள் என்று நம்புகிறோம்.
அதை தவிர்த்து, இது போன்ற செயல்களில் நீங்கள் தொடர்ந்து செயல்படுவீர்கள் என்றால் தென்னிந்திய நடிகர் சங்கம் திரைத்துறையில் தங்களுக்கு தொழில் ஒத்துழைப்பு தருவது பற்றி, தீவிரமாக முடிவு செய்ய வேண்டி இருக்கும் என்பதை முன்னரே தங்களுக்கு இக்கடிதத்தின் மூலமாகத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.
நடிகர் விஷால் டுவிட்டரில், “ராதாரவி பெண்களை பற்றி இழிவாக பேசியது கண்டிக்கத்தக்கது. இனிமேல் நீங்கள் ரவி என்று மட்டுமே அழைத்துக் கொள்ளுங்கள். ராதா என்பது பெண்ணின் பெயர்” என்று கூறியுள்ளார்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சமீபத்தில் நடைபெற்ற “கொலையுதிர் காலம்” படவிழாவில் திரையுலகின் மூத்த கலைஞரான நடிகர் ராதாரவி, திரைப்பட கதாநாயகியான நயன்தாராவை மிகவும் கொச்சைப்படுத்தி பேசியதும், மேலும் மற்ற நடிகைகளையும் கொச்சைப்படுத்துவது போல் இரட்டை வசன அர்த்தத்துடன் பேசியதும், ஒட்டுமொத்த திரையுலகம் மற்றும் மூத்த நடிகர்-நடிகைகளுக்கு மிகுந்த மனவருத்தம் அளிக்கிறது.
திரைத்துறையில் நீண்ட அனுபவத்தை கொண்டிருக்கும் ராதாரவி நகைச்சுவை என்ற பெயரில், கைதட்டலுக்காக இதுபோன்ற கொச்சையான பேச்சுகளை பேசி வருகிறார். அது திரைத்துறை மட்டுமின்றி, பொது வாழ்க்கையிலும் ராதாரவி மேல் உள்ள மதிப்பையும், மரியாதையும் குறைக்கிறது. அது மட்டுமின்றி, திரைத்துறையின்மேல் மக்களுக்கு உள்ள நம்பிக்கையை சீரழிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இச்செயலுக்காக ராதாரவிக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறது.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.