ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் – பாதுகாப்பு படை பதில் தாக்குதல்
ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் உள்ள ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் திடீர் துப்பாக்கி சூடு நடத்தியதில் இரண்டு ராணுவ வீரர்களுக்கு காயம் ஏற்பட்டது. பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாதுகாப்பு படையினர் நடத்திய பதில் தாக்குதல் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
நேற்றிரவு பாதுகாப்பு படையினர் நடத்திய பதில் தாக்குதலில் பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான். தப்பிய பயங்கரவாதிகளை தேடும் பணிகள் டிரோன்களை கொண்டு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த மூன்று நாட்களில் மூன்றாவது முறையாக இதுபோன்ற பயங்கரவாத தாக்குதல் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. முன்னதாக கத்துவாவில் பொது மக்கள் மீது பயங்கராவதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர், இதேபோன்ற மற்றொரு சம்பவத்தில் பக்தர்கள் பயணம் செய்த பேருந்து மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து பேசிய ஜம்முவின் ஏ.டி.ஜி.பி. ஆனந்த் ஜெயின், “நம் நாட்டில் நிலவும் அமைதியை சீர்குலைக்கும் வகையில் நமது அருகில் உள்ள விரோதிகளின் முயற்சி தான் இது. இந்த தாக்குதல் புதிய ஊடுறுவல் போன்று தெரிகிறது. இந்த சம்பவத்தில் ஒரு பயங்கரவாதி சுட்டு வீழ்த்தப்பட்டான், மற்றொருவரை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது,” என தெரிவித்தார்.