Tamilசெய்திகள்

ராணி எலிசபெத்துக்காக ஒரு நிமிடம் மவுனம் அஞ்சலி செலுத்திய இங்கிலாந்து மக்கள்

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கை முன்னிட்டு அவரது நினைவாக பிரிட்டன் முழுவதும் மக்கள் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தி உள்ளனர். இங்கிலாந்து அரசு கேட்டுக் கொண்டதற்கு இணங்க வீடுகள், உள்நாட்டு நிகழ்ச்சிகள் உள்பட பல்வேறு பகுதிகளில் பங்கேற்றிருந்த மக்கள் ஒரு நிமிடம் ராணி இரண்டாம் எலிசபெத்திற்கு மவுன அஞ்சலி செலுத்தினர்.

இதையொட்டி ராணி உடல் வைக்கப்பட்டிருக்கும் வெஸ்ட்மின்ஸ்டர் அரங்கில் மக்கள் அஞ்சலி செலுத்துவது 60 வினாடிகள் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், ராணி இரண்டாம் எலிசபெத் இறுதிச் சடங்கில் அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அவரது மனைவி ஜில் பைடன் ஆகியேரை தொடர்ந்து, நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன், கனடா பிரதமர் ஜஸ்டின் ரூடோ, அயர்லாந்து அதிபர் மைக்கேல் டேனியல் ஹிக்கின்ஸ் உள்ளிட்டோர் ராணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ உள்ளிட்டோரும் இதில் கலந்து கொண்டனர்.

முன்னதாக நேற்று ராணி எலிசபெத் உடலுக்கு இந்தியா சார்பில் அஞ்சலி செலுத்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, லான்காஸ்டர் ஹவுஸில் வைக்கப்பட்டிருந்த இரங்கல் புத்தகத்திலும் கையெழுத்திட்டார். பின்னர் பக்கிங்ஹாம் அரண்மனையில் மன்னர் சார்லஸை, திரவுபதி முர்மு சந்தித்து பேசினார்.