Tamilசெய்திகள்

ராஜேந்திர பாலாஜி கட்சி மாறவில்லை – எடப்பாடி பழனிசாமி விளக்கம்

தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது தனது பேச்சால் அடிக்கடி பரபரப்பை ஏற்படுத்தியவர் அன்றைய பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி.

கடந்த சில மாதங்களாக அரசியல் தொடர்பாக எந்தவித கருத்தும் கூறாமல் அமைதி காத்து வந்த இவர் திடீரென டெல்லி சென்றுள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றிவாய்ப்பை இழந்த  ராஜேந்திரபாலாஜி, பா.ஜனதாவில் இணைவார் என்றும், அதற்காகத்தான் டெல்லி சென்றுள்ளார் என்றும் அரசியல் களத்தில் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கு காரணம் கடந்த கால அரசியலில் அவரது பா.ஜனதா ஆதரவு பேச்சுதான்.

இந்நிலையில் இன்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியிடம் ராஜேந்திர பாலாஜி பாரதிய ஜனதாவில் இணைவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி,

ராஜேந்திரபாலாஜி குறித்து திட்டமிட்டு அவதூறு தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன; அவர் அ.தி.மு.க.வில்தான் உள்ளார், பா.ஜ.க.வில் இணைய மாட்டார்.

அ.தி.மு.க. ஆட்சியில் வாங்கப்பட்ட கடன்தொகை வளர்ச்சித் திட்டங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டது.

தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு எந்த பெரிய திட்டத்தையும் இதுவரை நிறைவேற்றவில்லை; சட்டமன்றத்தையே 100 நாட்கள் கழித்துதான் கூட்டுகின்றனர்.

பட்ஜெட் தாக்கல் செய்யும்போது செலவு கணக்கு தாக்கல் செய்வது வழக்கமான நடைமுறைதான்; அ.தி.மு.க.ஆட்சியில் நிர்வாக சீர்கேடு நடந்துள்ளது என்பது தவறான கருத்து என கூறினார்.