Tamilசெய்திகள்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட சாந்தன் காலமானார்

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட சாந்தன் கடந்த மாதம் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில், திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் உயர் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக சிகிச்சை பெற்ற வந்த நிலையில், தற்போது அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமானது. கோமா நிலைக்கு சென்றதாக கூறப்பட்டுள்ள நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இலங்கையை சேரந்த சாந்தன் விடுதலை செய்யப்பட்ட நிலையில் சொந்த நாடு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் சிறப்பு முகாமிற்கு அனுப்பப்பட்டார். அதனைத் தொடர்ந்து இலங்கை நாட்டிற்கு செல்வதற்கான முயற்சியில் ஈடுபட்டு மத்திய அரசிற்கு அதற்கான கோரிக்கைகள் அடங்கிய கடிதம் அனுப்பி இருந்தார்.

இந்நிலையில் திருச்சி மத்திய சிறை முகாமில் இருக்கும் சாந்தனை இலங்கைக்கு அனுப்ப மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. நுரையீரல் செயலிழப்பு உள்ளிட்ட பல்வேறு உடல்நல பாதிப்பு காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் சாந்தனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.

தமிழகத்திற்கு தேர்தல் பிரசாரத்திற்கு வருகை தந்த ராஜீவ்காந்தி கடந்த 1991-ம் ஆண்டு மே 21-ம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் கொல்லப்பட்டார். அதனைத் தொடர்ந்து ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ராபர்ட் பையாஸ், சாந்தன், ஜெயக்குமார், முருகன், நளினி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

விசாரணைக்கு பின்னர் அவர்ளுக்கு மரணதண்டனை அளிக்கப்பட்டது. மரண தண்டனை எதிர்த்து மேல் முறையீடு செய்தனர். அதன் காரணமாக 1999-ம் ஆண்டு மே 11-ம் தேதி அவர்களுக்கு மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

பின்னர் நீதிமன்றம் சாந்தன், ராபர்ட் பையாஸ், முருகன், நளினி, ரவிச்சந்திரன் உள்பட ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.