விளையாட்டு துறையில் வழங்கப்படும் மிகப்பெரிய உயரிய விருது ராஜீவ்காந்தி கேல்ரத்னா விருதாகும்.
மறைந்த பிரதமர் ராஜீவ்காந்தியின் பெயரில் 1991-92-ம் ஆண்டில் இருந்து இந்த விருது வருடம் தோறும் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ராஜீவ்காந்தி கேல்ரத்னா விருது ஆக்கி சகாப்தமான மேஜர் தயான்சந்த் விருது என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதை பிரதமர் நரேந்திர மோடி இன்று அறிவித்தார்.
நாடு முழுவதும் உள்ள மக்களிடம் இருந்து வந்த கோரிக்கையை ஏற்று இந்த விருதின் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி விளக்கம் அளித்துள்ளார்.
ஒலிம்பிக் போட்டியில் 41 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய ஆக்கி அணி வெண்கல பதக்கம் வென்று புதிய வரலாறு படைத்துள்ளது. இதே போல இந்திய மகளிர் ஆக்கி அணி சிறப்பாக விளையாடி ஒலிம்பிக்கில் 4-வது இடத்தை பிடித்தது.
இதையொட்டி ஆக்கியின் சாதனையாளரான தயான் சந்தை பெருமைப்படுத்தும் வகையில் அவரது பெயரில் கேல்ரத்னா விருது வழங்கப்பட உள்ளது.
இந்த பெயர் மாற்றத்துக்கு காங்கிரஸ் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.