ராஜினாமா செய்த காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும் – சித்தராமையா கடிதம்
கர்நாடக மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ்-ஜேடிஎஸ் கட்சிகளின் அதிருப்தி எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்தனர். எனவே, குமாரசாமி தலைமையிலான ஆட்சிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் கட்சி தலைமை ஈடுபட்டது. இதில் எந்த முன்னேற்றமும் ஏற்பட்டதாக தெரியவில்லை.
இந்நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக பெங்களூருவில் காங்கிரஸ் எம்எல்ஏக்களுடன் சித்தராமையா ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்குப் பிறகு சபாநாயகர் ரமேஷ்குமாரை சந்தித்தனர். அப்போது, பதவியை ராஜினாமா செய்த காங்கிரஸ் எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யும்படி காங்கிரஸ் சார்பில் சபாநாயகரிடம் கடிதம் கொடுத்தனர்.
கட்சிக்கு எதிராக செயல்பட்டதற்காக அவர்களை தகுதிநீக்கம் செய்வதுடன், 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்றும் கடிதத்தில் பரிந்துரை செய்துள்ளனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சித்தராமையா, “பாஜகவுடன் கூட்டு வைத்து ராஜினாமா செய்துள்ள காங்கிரஸ் எம்எல்ஏக்களை கட்சி தாவல் சட்டத்தின்கீழ் தகுதி நீக்கம் செய்யும்படி சபாநாயகரிடம் கேட்டுக்கொண்டுள்ளோம்.
இந்தமுறை மாநில பாஜக நிர்வாகிகள் மட்டுமின்றி, அமித் ஷா, மோடி போன்ற தேசிய அளவிலான தலைவர்களும் இதில் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் சித்தராமையா குற்றம்சாட்டினார்.
இந்த சூழ்நிலையில், மேலும் ஒரு காங்கிரஸ் எம்எல்ஏ இன்று ராஜினாமா செய்தார். கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்த ரோஷன் பெய்க் எம்எல்ஏ இன்று ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளார். அவர்களின் ராஜினாமா கடிதங்களை ஏற்கக்கூடாது என்றும் கேட்டுக்கொண்டோம்.