இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ராகுல் டிராவிட், இந்திய சீனியர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டார். இதனால் ஐபிஎல் அணிகளுக்கு பயிற்சியாளராக முடியாமல் இருந்தது. ஐபிஎல் கிரிக்கெட்டில் ராகுல் டிராவிட் 2014-ம் ஆண்டு வரை வீரராக விளையாடினார். அதன்பின் பயிற்சியாளராக செயல்பட்டார். பின்னர் இந்திய அணிக்கு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.
சமீபத்தில் முடிவடைந்த டி20 உலகக் கோப்பையுடன் அவரது தலைமை பயிற்சியாளர் பதவிக்காலம் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து ஐபிஎல் அணிகளில் ஏதாவது ஒரு அணிக்கு பயிற்சியாளராக செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டரை முதல் மூன்று மாதம் என்பதால் அதை ஏற்பதில் சிரமம் இருக்காது. பெரும்பாலான பயிற்சியாளர்கள் இதைத்தான் விரும்புகிறார்கள்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இலங்கையை சேர்ந்த சங்ககாரா உள்ளார். இவர் இங்கிலாந்து ஒயிட்-பால் அணி பயிற்சியாளர் பதவியை ஏற்பார் எனத் தெரிகிறது. இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் சங்கக்கராவை நியமிக்க விரும்புவதாக தெரிகிறது. இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் பதவியை ஏற்பது குறித்து சங்கக்கராவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சங்கக்கரா மறுப்பு ஏதும் தெரிவிக்கவில்லை.
இதனால் இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் பதவியை சங்ககாரா ஏற்றுக்கொண்டால், ராகுல் டிராவிட் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக வாய்ப்புள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உதவி பயிற்சியாளராக ஷேன் பாண்ட், டிரேவர் பென்னி இருந்து வருகிறார்கள்.
இங்கிலாந்து ஒயிட்-பால் கிரிக்கெட் பயிற்சியாளராக இருந்து மேத்யூ மோட் வெளியேற இருக்கும் நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு அவருக்கு மாற்று பயிற்சியாளரை தேடிவருகிறது.