200 தொகுதிகளை கொண்ட ராஜஸ்தான் மாநிலத்தில் வருகிற 25-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியை தோற்கடிக்கும் வகையில் பா.ஜனதா வியூகம் அமைத்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறது.
இன்று வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். ஆனால், நேற்று மதியம் வரை 18 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பெயரை பா.ஜனதா அறிவிக்காமல் இருந்தது. இந்த நிலையில், நேற்று மாலை கடைசி கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. உதைப்பூரில் உள்ள மாவ்லி தொகுதியில் தற்போதைய எம்.எல்.ஏ.-வுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. பத்திரிகையாளர் கோபால் சர்மா, தொழில் அதிபர் ரவி நய்யார் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கியது.
கடந்த 2-ந்தேதி 3-வது கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. இதில் முன்னாள் மந்திரி தவ் சிங் பாதியின் மறுமகள் பூனம் கன்வார் பாதிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. தற்போது அவருக்குப் பதிலாக அவரது, மகன் வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.-வாக இருக்கும் கிரிராஜ் மலிங்கா பா.ஜனதா கட்சிக்கு தாவியுள்ளார். நேற்று கட்சியில் இணைந்த நிலையில், பா.ஜனதா அவருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கியுள்ளது.