ராஜஸ்தானில் குஜ்ஜார் சமூகத்தினர், தங்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி மீண்டும் போராட்டத்தை தொடங்கி உள்ளனர். கடந்த 8-ம் தேதியில் இருந்து மீண்டும் சாலை மறியல் மற்றும் ரெயில் மறியலில் ஈடுபட்டுள்ளனர். ரெயில்கள் செல்லும் தண்டவாளத்தின்மீது கூடாரங்களை அமைத்து அவர்கள் இரவு, பகலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் ரெயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து போராட்டக் குழுவினருடன் அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அமைச்சர் விஸ்வேந்திர சிங் மற்றும் ஐஏஎஸ் அதிகாரி நீரஜ் பவான் ஆகியோர் குஜ்ஜார் சமூக தலைவர் கிரோரி சிங் பெயின்ஸ்லாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. எனவே, போராட்டம் தொடர்ந்து நடைபெறுகிறது.
மூன்றாவது நாளான நேற்று தோல்பூர் நெடுஞ்சாலையில் போராட்டக்காரர்கள் வாகனங்களை மறித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை கட்டுப்படுத்த வந்த போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல் வெடித்தது. இந்த ஆத்திரத்தில் சிலர், காவல்துறையின் வாகனங்களுக்கு தீ வைத்தனர். போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.
இந்நிலையில், போராட்டம் நடத்தி வரும் குஜ்ஜார் சமூகனத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக இருப்பதாக முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். ஆனால், சாலை மறியல் மற்றும் ரெயில் மறியலில் ஈடுபடுவதை வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும் கூறினார்.
குஜ்ஜார்களின் போராட்டம் காரணமாக கோட்டா ரெயில்வே கோட்டத்தில் புதன்கிழமை வரை 28 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 37 ரெயில்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன. இதேபோல் வடக்கு ரெயில்வே, இன்று 10 ரெயில்களை ரத்து செய்துள்ளது. நாளை 12 ரெயில்களும், நாளை மறுதினம் 15 ரெயில்களும் ரத்து செய்யப்பட்டிருப்பதாகவும் அறிவித்துள்ளது.