X

ராஜஸ்தானில் டிரக் டிரைவருக்கு ரூ.1.41 லட்சம் அபராதம்

இந்தியாவில் கடந்த செப்டம்பர் 1-ம் தேதி முதல் புதிய மோட்டார் வாகன சட்டம் கடுமையான முறையில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. விதிமுறைகளை மீறுவோருக்கு கடுமையான அபராதங்களும் விதிக்கப்பட்டு வருகின்றன.

அதிகப்படியான அபராதங்களை அரசு விதிப்பதாகவும் பல புகார்கள் எழுந்து வருகின்றன. சமீபத்தில் டிராபிக் விதிகளை மீறியதாக ஒடிசாவைச் சேர்ந்த நபருக்கு ரூ.80 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

சமீபத்தில், மத்திய மந்திரி நிதின் கட்காரி கூறுகையில், ‘மும்பையில் எனது பெயரில் உள்ள காருக்கு அதிவேகம் காரணமாக கடுமையான அபராதம் விதிக்கப்பட்டது’ என கூறியிருந்தார்.

இந்நிலையில் ராஜஸ்தானைச் சேர்ந்த பகவான் ராம் எனும் டிரக்கின் உரிமையாளர் ரூ.1,41,000 அபராதமாக கட்டியுள்ளார். இதற்கான காரணம் வண்டியில் அதிக பளுவை ஏற்றி, புதிய வாகன விதிகளை கடைபிடிக்காததே ஆகும்.

புதிய மோட்டார் வாகன சட்ட மசோதாவின்படி, வாகனம் ஓட்டும்போது செல்போன் உபயோகித்தால் ரூ.1,000-5,000 வரை அபராதம் விதிக்கப்படுகிறது. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவருக்கு ரூ.2,000-10,000 வரை அபராதம் வசூலிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.