ராஜராஜ சோழன் காலத்தில் இந்து மதம் என்ற பெயர் கிடையாது – கமல்ஹாசன் பதில்

கல்கி எழுதிய நாவலை தழுவி இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ள ‘பொன்னியின் செல்வன்-1’ திரைப்படம், உலகம் முழுவதும் கடந்த செப்டம்பர் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாராகியிருந்த இந்த படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பல முன்னணி திரைப்பிரபலங்கள் நடித்துள்ளனர். இப்படம் வெளியான முதல் நாளில் இருந்தே மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தமிழகம் மட்டுமல்லாது ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு நல்ல வசூல் கிடைத்துள்ளது.

இதனிடையே ராஜராஜசோழன் குறித்து அண்மையில் இயக்குனர் வெற்றிமாறன் கூறிய கருத்து விமர்சனத்திற்கு உள்ளானது. சினிமாவை அரசியல்மையப்படுத்த வேண்டியது முக்கியம் என்று தெரிவித்த அவர், திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிப்பது, ராஜராஜ சோழனை இந்து அரசனாக்குவது என தொடர்ந்து நம்மிடமிருந்து அடையாளங்களை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று அவர் பேசினார்.

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் சென்னையில் நேற்று பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் சிறப்பு காட்சியை நடிகர் கார்த்தி, நடிகர் விக்ரம் ஆகியோருடன் இணைந்து பார்த்துவிட்டு, பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவரிடம் வெற்றிமாறன் கூறிய கருத்து குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த கமல்ஹாசன், “ராஜராஜசோழன் காலத்தில் இந்து மதம் என்ற பெயர் கிடையாது. சைவம், வைணவம், சமணம் போன்ற சமயங்கள் இருந்தன. இந்து என்பது ஆங்கிலேயர்கள் வைத்த பெயர். இங்கு மதங்கள் வெவ்வேறாக இருந்தது. அவற்றை 8-ம் நூற்றாண்டில் ஆதிசங்கரர் ஷண்மத ஸ்தாபனம் என்று கொண்டு வந்தார். இவையெல்லாம் வரலாற்றில் உள்ளவை. இந்த திரைப்படம் ஒரு வரலாற்றுப் புனைவு. இங்கு நாம் சரித்திரத்தை புனைய வேண்டாம், திரிக்க வேண்டாம், மொழி அரசியலை திணிக்கவும் வேண்டாம். நல்ல கலைஞர்களை கொண்டாடுவோம்.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools