X

ராக்கெட் ஏவுதளத்தை சீரமைக்கும் வட கொரியா! – டிரம்ப் அதிருப்தி

அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் கடந்த மாத இறுதியில் வியட்நாமில் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின்போது அணு ஆயுதங்களை கைவிடுதல், பொருளாதார தடைகளை நீக்குதல் போன்ற முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு, ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எந்த உடன்பாடும் எட்டப்படாமல் பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தது.

இந்நிலையில், டிரம்புடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், வடகொரியா தனது முக்கிய ராக்கெட் ஏவுதளத்தில் புனரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. தலைநகர் பியாங்காங்கில் உள்ள டோங்சாங்-ரி ராக்கெட் ஏவுதளத்தில் மறுகட்டமைப்பு பணிகள் நடைபெறுவதை வடகொரியாவின் செயற்கைகோள் படங்கள் காட்டுகின்றன.

இந்த தகவலால் அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் அதிருப்தி அடைந்துள்ளார். வடகொரியா தனது ராக்கெட் ஏவுதளத்தை புனரமைப்பது குறித்த செய்தி உண்மையாக இருந்தால், அது மிகவும் தனக்கு ஏமாற்றம் அளிப்பதாக கூறினார். மேலும் வடகொரியாவில் என்ன நடக்கிறது என்பதை கவனித்து வருவதாகவும் அவர் கூறினார்.