X

ராகுல் டிராவிட்டை விமர்சித்த ரவி சாஸ்திரி

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்தவர் ரவி சாஸ்திரி. அவர் பதவிக்காலம் முடிந்த பிறகு ராகுல் டிராவிட் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவரது தலைமையில் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலகக் கோப்பையை எதிர்கொண்டது. இதில் இந்திய அணி அரையிறுதியில் தோல்வியடைந்து ஏமாற்றம் அடைந்தது. தற்போது ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இந்திய அணி நியூசிலாந்துக்கு சென்றுள்ளது. தலா மூன்று டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. முதல் டி20 போட்டி நாளை தொடங்குகிறது. நியூசிலாந்து தொடரில் ராகுல் டிராவிட்டுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. லஷ்மண் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் தலைமை பயிற்சியாளர் அடிக்கடி ஓய்வு எடுப்பது சரியாக இருக்காது என ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து ரவி சாஸ்திரி கூறியதாவது:- நான் ஓய்வு (Break)என்று நம்பவில்லை. ஏனென்றால் நான் எனது அணியை புரிந்து கொள்ள விரும்புகிறேன். அதன்பின் அணியை எனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள விரும்புவேன். இந்த ஓய்வுகள் (Breaks)… நேர்மையாக இருக்க உங்களுக்கு இவ்வளவு ஓய்வுகள் தேவையா?. ஐ.பி.எல். தொடரின்போது 2 அல்லது மூன்று மாதங்கள் கிடைக்கும். இது உங்களுக்கு ஓய்வு எடுக்க போதுமானது. ஆனால் மற்ற நேரங்களில், ஒரு பயிற்சியாளர் பயிற்சியாளராகத்தான் இருக்க வேண்டும் என நினைக்கிறேன். இவ்வாறு ரவி சாஸ்திரி குறிப்பிட்டுள்ளார்.